சுடச் சுடச் செய்திகள்

பங்ளாதேஷ் ஊழியரின் கர்ப்பிணி மனைவிக்காக நன்கொடை திரட்டு; உயிரிழந்த வேறு 2 வெளிநாட்டு ஊழியர் குடும்பத்துக்கும் பகிர்ந்தளிப்பு

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பங்ளாதேஷ் ஊழியர் ஒருவரின் கர்ப்பிணி மனைவிக்காக பொருட்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார் வழக்கறிஞர் தீபா சுவாமிநாதன், 48.

ItsRainingRaincoats என்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கான சமூக நிறுவனத்தின் நிறுவனருமான திருவாட்டி தீபா, இந்த பங்ளாதேஷ் ஊழியரின் மனைவிக்காக, ஃபேஸ்புக் வழியாக நன்கொடை திரட்டும் பணியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கினார்.

திருவாட்டி தீபாவின் இந்த முயற்சியில் பங்கெடுத்து நன்கொடை வழங்க பலர் முன்வந்தனர். 

அவ்வாறு சேகரிக்கப்படும் பொருட்களை பங்ளாதேஷுக்கு இலவசமாக அனுப்பிவைக்க சிங்போஸ்ட் முன்வந்தது. 

தாம் எதிர்பார்த்ததைவிட பல மடங்கு பொருட்கள் நன்கொடையாக சேர்ந்திருப்பதாக ItsRainingRaincoats ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டுள்ளது.

சுமார் 15 தொண்டூழியர்கள் அவற்றைப் பெட்டிகளில் அடைக்கும் பணியில் இன்று (மார்ச் 14) ஈடுபட்டனர். அவர்களுடன் சிங்போஸ்டும் சேர்ந்துகொண்டது.

கிட்டத்தட்ட 33 பெட்டிகளில் அடைக்கும் அளவுக்கு பொருட்கள் குவிந்தன.

இவ்வளவு பொருட்களையும் அந்த கர்ப்பிணி தனது சிறிய வீட்டில் வைத்து கையாளுவது சிரமம் என்று குறிப்பிட்ட ItsRainingRaincoats, அண்மையில் விபத்துகளில் உயிரிழந்த வேறு இரண்டு வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் சில பொருட்களை அனுப்பத் திட்டமிடுவதாகத் தெரிவித்தது.

கப்பல் பட்டறையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த யங் மந்தீப் எனும் வெளிநாட்டு ஊழியருக்கு மூன்று இளம் குழந்தைகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

அதேபோல, கான்கிரீட் கலவை இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்த ராஜகுரு எனும் வெளிநாட்டு ஊழியருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர்களில் ஒரு குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன நிலையில், அந்தக் குழந்தையை ராஜகுரு பார்க்கவே இல்லை என்றும் அந்த ஃபேஸ்புக் பதிவு குறிப்பிட்டது.

அதனையடுத்து, சேகரிக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை இவ்விரு வெளிநாட்டு ஊழியர்களின் குடும்பத்தாருக்கும் அனுப்பி வைக்கிறது ItsRainingRaincoats.

சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 42வது நபரான 39 வயது பங்ளாதேஷ் ஊழியர் கடந்த பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இங்கு கிருமித்தொற்று கண்ட ஐந்து பங்ளாதேஷ் ஊழியர்களில் இவரும் ஒருவர்.

அவரது மனைவி தற்போது எட்டு மாத கர்ப்பிணி. அவர்களுக்கு இது முதல் குழந்தை. கருவிலிருப்பது ஆண் குழந்தை என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த ஊழியர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். அதற்குப் பிறகு இந்த கர்ப்பிணி மனைவி, தனது கணவரைப் பல மாதங்களாகப் பார்க்கவில்லை என்று தி நியூ பேப்பருக்கு அளித்த பேட்டியில் திருவாட்டி தீபா குறிப்பிட்டார். 

“முதல்முறை தாயாவதே கடினமான பயணம்; அதற்கும் மேல் பேரிடரை எதிர்கொள்வது மிகவும் கடினம்,” என்று 13, 15 வயதுகளில் இருக்கும் இரண்டு மகன்களுக்குத் தாயான திருவாட்டி தீபா.

இந்தப் பொருட்கள் அந்தக் குடும்பத்தாரை அடுத்த வாரம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

#கொவிட்-19 #கொரோனா #வெளிநாட்டு ஊழியர் #தமிழ்முரசு
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon