அத்தியாவசியப் பொருட்களுக்கு அளவு கட்டுப்பாடு விதித்த ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள்

அத்தியாவசியப் பொருட்களுக்கு அளவு கட்டுப்பாடு விதித்த ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள்

2 mins read
1198f8e1-03d0-48b3-a2d3-00001574e2bd
மலேசியாவின் அண்மைய அறிவிப்பைத் தொடர்ந்து ஃபேர்பிரஸ் கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்டுக்குத் தேவையான சில அத்தியாவசியப் பொருட்களை அளவோடு வாங்குவதன் தொடர்பில் என்டியுசி ஃபேர்பிரைஸ் சில புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கழிவறைத் தாள், நூடல்ஸ், அரிசி, கோழி, முட்டை போன்றவை இப்பட்டியலில் அடங்கும்.

கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க மார்ச் 18 முதல் இம்மாதம் 31ஆம் தேதிவரை மலேசியாவில் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும் என்று திங்கட்கிழமை இரவு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஃபேர்பிரைஸ் இக்கட்டுப்பாடுகளை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது.

மலேசியாவுக்குள் வெளிநாட்டவர் செல்ல முடியாது என்றும் மலேசியர்களும் பிற நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரர்கள் பதற்றமடைந்தனர்.

சிங்கப்பூர் 90 விழுக்காட்டுக்கு மேலான அதன் உணவுப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.

மலேசியாவின் இந்த அறிவிப்பால் அங்கிருந்து வரக்கூடிய உணவுப்பொருட்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் இங்குப் பலர் பேரங்காடிகளுக்கு விரைந்தனர்.

காய்கறிகள், பழங்கள், மீன்வகைகள் போன்ற உணவுவகைகள் மலேசியாவிலிருந்து வந்தாலும் சீனா, இந்தோனீசியா, வியட்நாம், தாய்லாந்து, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா என 170 நாடுகளிலிருந்தும் சிங்கப்பூர் இறக்குமதி செய்கிறது.

இவ்வாறு போதுமான உணவுப்பொருட்கள் இருப்பதை சிங்கப்பூர் உறுதிசெய்வதுடன் உள்ளூர் பண்ணைகளின் உற்பத்தித்திறனையும் அது ஊக்குவிக்கிறது. இருப்பினும் சிங்கப்பூரர்களிடையே பதற்றம் நிலவவே செய்கிறது.

இந்நிலையில் இரண்டு மூட்டை அரிசி, $30 மதிப்பிலான காய்கறிகள், 30 முட்டைகள் என்ற கணக்கில் மட்டுமே வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்று கூறும் அறிவிப்புகளை ஃபேர்பிரைஸ் இன்று அதன் கிளைகளில் ஒட்டியது.

அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதால் தேவையானவற்றை மட்டும் வாங்குமாறு பேரங்காடி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

#சிங்கப்பூர் #ஃபேர்பிரைஸ் #மலேசியா கட்டுப்பாடு #கொரோனா #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்