இரண்டு வாரங்களுக்கு மலேசியா அதன் எல்லைகளை மூடியுள்ள நிலையில், சிங்கப்பூரில் தங்க முடிவெடுத்துள்ள மலேசிய ஊழியர்களுக்குத் தங்கும் வசதிகளையும் அவர்களின் முதலாளிகளுக்கு இதனால் ஏற்படும் செலவுகளையும் சமாளிக்க அரசாங்கம் வழிகளைக் கண்டறியும் என்று கூறப்பட்டது.
மலேசியாவில் இன்று முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வந்ததை அடுத்து சிங்கப்பூரில் வேலை செய்யும் மலேசியர்களில் பலர் இங்கு தங்க முடிவெடுத்தனர்.
"ஊழியர்கள் தங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்து மனிதவள அமைச்சு பேசியுள்ளது. இதன் பின்னர் முதலாளிகள் தங்களின் தேவைக்கேற்ப ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்," என்றார் தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்.
மலேசிய ஊழியர்கள் தங்குவதற்குப் போதுமான இடவசதி குறித்தும் அதன் தொடர்பில் ஏற்படக்கூடிய செலவுகளைச் சமாளிப்பது குறித்தும் ஆதரவு தரப்படும் என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
காலாங் பாருவில் அமைந்துள்ள சிங்போஸ்ட் அஞ்சல் விநியோகத் தளத்தில் இன்று திரு ஈஸ்வரன் மற்றும் தொடர்பு, தகவல மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் அங்கிருந்த கிட்டத்தட்ட 90 அஞ்சல் ஊழியர்களைச் சந்தித்து நன்றி கூறினர்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு சிங்போஸ்ட் நிறுவனம் 400க்கும் மேற்பட்ட அதன் மலேசிய ஊழியர்கள் மூன்று வெவ்வேறு ஹோட்டல்களில் தங்க ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி காலாங் சிங்போஸ்ட் கிளையில் பணிபுரிவோருக்கு 'ஹாலிடே இன்' ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சிங்போஸ்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் மலேசியர்களில் 20 விழுக்காட்டினர் இங்கு தங்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.
அவர்கள் தங்களின் வருடாந்திர விடுப்பைப் பயன்படுத்திய பின்னர் சம்பளம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்வதாக முடிவெடுத்துள்ளனர்.
இதுவரை மலேசியாவில் 600க்கும் மேற்பட்ட கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. இருவர் உயிரிழந்துவிட்டனர்.
கிருமி பரவலைக் கட்டுப்படுத்த மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை திங்களன்று அறிவித்தார்.
இந்நிலையில் மலேசியா விதித்துள்ள ஆணை, இரண்டு வாரங்களுக்கு மேல் நீட்டிக்கப்படுவது குறித்தும் பேசினார் அமைச்சர் ஈஸ்வரன்.
"நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்போம். நம் நிறுவனங்கள் கூறும் கருத்துகளைக் கேட்டுக்கொள்வோம். மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்துத் தகுந்தபடி பின்னர் முடிவெடுப்போம்," என்றார் திரு ஈஸ்வரன்.
#சிங்கப்பூர் #மலேசியா #கொரோனா


