எல்டிஏ: மின்-ஸ்கூட்டர் ஓட்டியவரை அதிகாரி பிடித்து தள்ளியதாக பரவும் குற்றச்சாட்டு பொய்யானது

2 mins read
e67a60af-0741-43ee-83cb-3756f8ced531
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அருகில் ஒரு ஆடவர் விழுந்து கிடப்பது ஆகியவற்றைக் காட்டும் புகைப்படங்களுடன் இந்த பொய்யான குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. படம்: 沈家/FACEBOOK -

மின்-ஸ்கூட்டர் ஓட்டிய ஒருவரை அமலாக்கப் பிரிவு அதிகாரி உதைத்ததாக பொய்யான செய்தி பரவுவதாகவும் போலிசார் அது குறித்து விசாரித்து வருவதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) இன்று (மார்ச் 20) தெரிவித்துள்ளது.

அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அருகில் ஒரு ஆடவர் விழுந்து கிடப்பது ஆகியவற்றைக் காட்டும் புகைப்படங்களுடன் இந்த பொய்யான குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

சம்பவம் நேற்று பிற்பகலில் நிகழ்ந்ததாகச் சொன்ன ஆணையம், சம்பவம் பற்றி இணையத்தில் பரவும் தகவல் "கண்டுபிடிக்கப்படாதது, பொய்," என்று குறிப்பிட்டது.

ஈசூனில் ஏற்புடையதல்லாத மின்-ஸ்கூட்டர் ஒன்றை நடைபாதையில் ஒருவர் ஓட்டிச் சென்றதை ஆணையத்தின் துடிப்பான நடமாட்ட சாதன அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் (AMEOs) கண்டனர்.

வண்டியை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்ததற்குப் பணியாமல், திரும்பி தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர் தடுமாறி வண்டியிலிருந்து விழுந்தார் என்று ஆணையம் விளக்கம் அளித்தது.

"அந்த ஆடவரின் தகவல்களை அதிகாரிகள் சேகரித்தபோது, அவர் மீண்டும் தப்பியோட முயற்சி செய்தார். அப்போது மற்றொரு அதிகாரி அந்த ஆடவர் ஓடிவிடாமல் பிடித்தார். அந்த நடவடிக்கையில் இருவரும் கீழே விழுந்தனர்," என்றது ஆணையம்.

பாதுகாப்பு அக்கறைகளுக்காக, கடந்த ஆண்டு நவம்பர் முதல் மின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் ஓட்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாண்டு தொடக்கம் முதல் அந்தத் தடை கடுமையாக பின்பற்றப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணையை போலிசார் மேற்கொண்டுள்ளனர்.

தனது அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் தெரிவித்தது.

இணையப் பதிவுகளை பொறுப்பான முறையில் மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட ஆணையம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பரில், மின்-ஸ்கூட்டர் ஓட்டிய ஒருவரை உதைத்ததற்காக செர்ட்டிஸ் துணை காவல் அதிகாரி ஒருவரை ஆணையம் பணி நீக்கம் செய்தது. அந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவி பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

#சிங்கப்பூர் #மின்-ஸ்கூட்டர்

குறிப்புச் சொற்கள்