குறிப்பிட்ட வயது வரம்புகளுக்குள் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து, வயதுகளின் அடிப்படையில் பாரபட்சமான முறையில் வேலை விளம்பரம் செய்ததற்காக ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சு இன்று (மார்ச் 20) வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அடுத்த 12 மாதங்களுக்கு இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்த தடை விதிக்கப்படுவதுடன் அங்கு பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிச் சீட்டுகளையும் புதுப்பிக்க முடியாது என்று குறிப்பிட்டது.
'விஸ்டம்ட்ரீ லேர்னிங் சென்டர்', 'அவுட்ஷைனர்ஸ் ஈவன்ட்ஸ்', 'செக்யூரிட்டி & ரிஸ்க் சொல்யூஷன்ஸ்', முடிதிருத்தம் மற்றும் ஸ்பா சேவை வழங்கும் இரண்டு நிறுவனங்கள், 'இன்கிரடிபல் சர்வீஸ் டாக் அண்ட் ஐடிஓசி' என்பவை அந்த நிறுவனங்கள்.
வயது தொடர்பிலான பாரபட்சம் காட்டியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள முதல் ஐந்து நிறுவனங்கள் இவை. இத்தகைய பாரபட்சங்களுக்கு கடுமையான அபராதம் இந்த ஆண்டு ஜனவரியில் நடப்புக்கு வந்தது.
"எந்த வயதினராக இருந்தாலும், ஒரு வேலைக்கு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்," என்று மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
அண்மைய ஆண்டுகளில் வேலையிட பாரபட்சம் குறைந்திருப்பதாக அமைச்சு குறிப்பிட்டது.
வயது, இனம், பாலினம் தொடர்பான பாரபட்சங்களுடன் சம்பந்தப்பட்ட புகார்கள், 2016ஆம் ஆண்டில் 240 ஆக இருந்ததாகவும் கடந்த ஆண்டு அது 125 ஆகக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவற்றுள் வயது தொடர்பிலான பாரபட்சங்கள்தான் அதிகம். 2016ல் 100 ஆக இருந்த அந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 50 ஆனது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
#சிங்கப்பூர் #வேலையிட பாரபட்சம்


