சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றால் இருவர் இன்று (மார்ச் 21) காலை உயிரிழந்தது கவலையளிக்கிறது என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட பிரதமர் லீ சியன் லூங், அது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சு இன்று அறிவித்தது என்றார்.
உயிரிழந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, அதிக நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் என்று குறிப்பிட்ட பிரதமர், அதிக இழப்புகளை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
நோயாளிகளைப் பராமரிப்பதற்கு ஆன அனைத்தையும் நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை கிருமித்தொற்று கண்ட 385 பேரில் 131 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர் என்றார்.
கிருமித்தொற்று கண்ட பெரும்பாலானோரின் உடல்நிலை மேம்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிருமித்தொற்று பரவலை மெதுவடையச் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் லீ, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து அவற்றுக்கு இணங்கி செயல்பட வேண்டும் என்றும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
"நம்மை, நமது குடும்பத்தாரை, சிங்கப்பூரைப் பாதுகாப்பாக வைத்திருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார் அவர்.

