கொவிட்-19: உயிரிழந்தோரின் உடல்களை கண்டிப்பான வரைமுறைகளுக்கு உட்பட்டு கையாள ஏற்பாடு

கொவிட்-19: உயிரிழந்தோரின் உடல்களை கண்டிப்பான வரைமுறைகளுக்கு உட்பட்டு கையாள ஏற்பாடு

2 mins read
653e1278-1def-45cc-b1b5-acd2671d278b
தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் பின்புறத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ ஊழியர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் உடல்கள், தேசிய சுற்றுப்புற வாரியம் வழங்கிய வழிகாட்டுதலின்படி எரியூட்டப்படுவதற்கோ அல்லது புதைக்கப்படுவதற்கோ சுகாதார பராமரிப்பு ஊழியர்களால் தயார் செய்யப்படும்.

காற்றுப்புகாத சவப்பெட்டிகளில் வைக்கப்படுவதற்கு முன்பாக, அவர்களது உடல்கள் இரட்டை பைகளுக்குள் வைக்கப்படும்.

இறுதிச் சடங்கு செய்வதற்கான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இறுதிச் சடங்கு நடத்தும் நிறுவனங்களுக்கும் பார்லர்களுக்கும் ஏற்கெனவே வழிகாட்டி குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதிச் சடங்கு சமயங்களில் 250க்கும் குறைவான ஆட்கள் கலந்துகொள்வதுடன், அவர்கள் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அந்த வழிகாட்டிகளில் அடங்கும்.

சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்த பிறகு தேசிய சுற்றுப்புற வாரியம் இந்த வழிகாட்டிக் குறிப்புகளை இறுதிச் சடங்கு செய்யும் நிறுவனங்களுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி வழங்கியது.

எரியூட்டுவதற்கோ அல்லது புதைப்பதற்கோ, உடல்களைப் பெற்றுக்கொள்வது, கையாளுவது, வேறு இடங்களுக்கு உடல்களை மாற்றுவது போன்றவற்றை தேசிய தொற்று நோய்கள் நிலையம் நடத்திய அடிப்படை தொற்றுக் கட்டுப்பாட்டு வகுப்புகளுக்குச் சென்ற இறுதிச் சடங்கு செய்யும் நிறுவன ஊழியர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.

கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களைத் தொடாதபடி இறுதிச்சடங்கு செய்வதற்கு அனுமதி உண்டு என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

பாதுகாப்பு கருதி, இறுதிச் சடங்கு நிகழ்வுகளை குறுகிய காலத்துக்கு வைத்துக்கொள்ளுமாறு குடும்பத்தாருக்கு வாரியம் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், அந்த நிகழ்வுகளிலும் சுகாதார அமைச்சு வெளியிட்ட பாதுகாப்பான இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நிகழ்வுக்கு வருவோரின் உடல் வெப்பநிலையைக் கண்காணித்தல், அவர்களது விவரங்களைப் பதிவு செய்தல் போன்றவற்றைச் செய்யவும் உணவுகளை தனித்தனி பொட்டலங்களாக வழங்கவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு இறுதிச் சடங்கு நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மண்டாய் தகனச் சாலையில் எரியூட்டுவதற்கு முன்பாக வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு குடும்பங்களுக்கு எளிதான தெரிவுகளை வழங்குமாறு இறுதிச் சடங்கு நிறுவனங்களுக்கு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

வலுவான சமய காரணங்கள் இருந்தால் அத்தகையோரின் உடல்களைப் புதைக்கவும் அனுமதி உள்ளது.

கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கை செய்ய பல நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும் காலத்தில் உற்றவர்களுக்கு அந்தத் தகவல்கள் வழங்கப்படும்.

உயிரிழந்தவர் வெளிநாட்டவராக இருக்கும்பட்சத்தில் சடலத்தை எரியூட்டி, அஸ்தியை தாயகத்துக்கு எடுத்துச் செல்லலாம். அஸ்தியை எடுத்துச் செல்ல சிறப்பு அனுமதி தேவையில்லை என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்