ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று US$500,000 (S$730,000) தொகையை கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக நன்கொடையாக வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம்.
உலக சுகாதார நிறுவனத்தின், கொரோனா கிருமித்தொற்றுக்கான உத்திபூர்வ தயார்நிலை மற்றும் மறுவினைத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கு இந்தப் பங்களிப்பு செய்யப்படுவதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு நேற்று (மார்ச் 23) தெரிவித்தது.
மனிதர்களுக்கிடையே இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
"கொவிட்-19 பெருமளவில் பரவி வருவது மற்றும் அதனால் உயிரிழப்புகள் உட்பட, பொதுச்சுகாதாரம், சமுதாயம், பொருளியல் ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் போன்றவற்றின் தொடர்பில் சிங்கப்பூர் ஆழ்ந்த அக்கறை கொண்டிருக்கிறது," என்று அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.
இம்மாதம் 11ஆம் தேதி கொவிட்-19 ஒரு கொள்ளைநோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததையும் அனைத்து நாடுகளும் ஆபத்தில் இருப்பதால் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று அது குறிப்பிட்டதையும் அமைச்சு நினைவுகூர்ந்தது.
"மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் தொடர்ந்து ஆராயும்," என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
"அபாயகரமான நிலையில்" இருக்கும் நாடுகளில் முதலீடு செய்வதன் வழியாக கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராகப் போரிட US$675 மில்லியன் நன்கொடைக்கு கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அறநிறுவனம், 'சுவிஸ் ஃபிலாந்த்ரபி ஃபவுண்டேஷன்', உலக சுகாதார நிறுவனம் ஆகியன இணைந்து இம்மாதத்தில் 'சாலிடாரிட்டி ரெஸ்பான்ஸ் ஃபண்ட்' எனும் நிதியை நிறுவின.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கொள்ளைநோய்க்கு எதிரான போரில் நாடுகளுக்கு உதவ உலக சுகாதார நிறுவனம் மற்றும் அதன் பங்காளிகளின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக பலதரப்பட்டோரிடமிருந்து இந்த நிதி திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
#சிங்கப்பூர் #ஐக்கிய நாடுகள் சபை #உலக சுகாதார நிறுவனம்


