வாகனத்துக்குள் சண்டை, மிருகத்தின் கொம்பு மூளையைத் துளைத்ததில் ஓட்டுநர் மரணம்; ஆடவருக்கு சிறை

3 mins read
cd4696b6-97c8-4de2-bd34-1eb1fdf1ce79
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில், திரு சிவகுமார் பெருமாளுடன் முன்பு பணியாற்றிய 33 வயது சரவணன் அரிமுரம் (படம்) மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கனரக லாரி ஒன்றில் 'லிஃப்ட்' கேட்டு ஏறிச் சென்ற ஓர் ஆடவர், அந்த ஓட்டுநரின் உறவினர் ஒருவரின் முதுகில் மிருகக் கொம்புகளால் குத்தியதால் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

அந்த கொம்புகள், ஓட்டுநரான 43 வயது திரு சிவகுமார் பெருமாளின் முகத்தில் இடித்தன. திரு சிவகுமார் பெருமாளின் இடது கண்ணில் குத்திய கொம்புகள் அவரது மூளையைத் துளைத்தன; பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்தார் அவர்.

2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின் தொடர்பில், திரு சிவகுமார் பெருமாளுடன் முன்பு பணியாற்றிய 33 வயது சரவணன் அரிமுரம் மீது முதலில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அடாவடியாக தாம் நடந்துகொண்டதை ஒப்புக்கொண்ட சரவணனுக்கு ஓராண்டு, எட்டு மாத சிறைத் தண்டனை இன்று (மார்ச் 24) விதிக்கப்பட்டது.

ஓடிக்கொண்டிருந்த கனரக வாகனத்தில் கொம்புகளை ஆடவிட்ட சரவணன், ஓட்டுநரான சிவகுமார் பெருமாள் மற்றும் மற்ற சாலைப் பயன்பாட்டாளர்களுக்கு அபாயம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டார்.

திரு சிவகுமாரின் உறவினரான 18 வயது நவின் பார்த்திபனைத் தாக்கியதையும் சரவணன் ஒப்புக்கொண்டார்.

அந்த கொம்புகளின் நீளம் 40 சென்டிமீட்டர் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கொம்புகள் எப்படி அங்கு வந்தன என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவிலை.

கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக, தேபான் கார்டன்சில் உள்ள புளோக் 53ன் கீழ்த்தளத்தில் இம்மூவரை உள்ளிட்ட ஒரு குழு மது அருந்தியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மாலை சுமார் 5 மணியளவில் தமது உறவினரான நவீனுடன் ஈசூனுக்கு செல்ல விரும்பிய திரு சிவகுமார், சரவணனையும் உடன் அழைத்துச் செல்ல சம்மதித்தார்.

கனரக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சரவணனுடன் பேசிய அவரது பெண் தோழி, அவரை தோ பாயோவில் சந்திக்க விரும்பினார்.

தன்னை தோ பாயோவில் இறக்கிவிட முடியுமா என்று கேட்ட சரவணனின் கோரிக்கையை சிவகுமார் நிராகரித்தார். அதனைத் தொடர்ந்து சிவகுமாருடன் சண்டையில் இறங்கிய சரவணன், அந்த வாகனத்தை தாம் ஓட்ட முற்பட்டார்.

வண்டி ஜூரோங் டௌன் ஹால் ரோட்டில் சென்றுகொண்டிருந்தபோது சரவணனை நவின் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் சரவணனை உடனடியாக இறக்கி விடுமாறு நவின் சிவகுமாரிடம் கூறினார்.

அதனையடுத்து ஆத்திரமடைந்த சரவணன், அந்த வாகனத்தின் முன் பகுதியில் இருந்த கொம்புகளை எடுத்து நவினை தாக்கினார். அதனையடுத்து சரவணனை சத்தம்போட்ட சிவகுமார் கவனம் சிதறி வாகனத்தை தாறுமாறாக ஓட்டியதில் சாலையின் இடது, வலது ஓரங்களில் இடித்ததுடன் வாகனமும் தலைகுப்புற கவிழ்ந்தது.

வாகனத்திலிருந்து எப்படியோ வெளியில் வந்த நவின், அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள், கனரக வாகனத்தின் முன் பகுதியை வெட்டி, சரவணன், சிவகுமார் ஆகிய இருவரையும் விடுவித்தனர்.

மயங்கிய நிலையில் இருந்த சிவகுமார், மற்ற இருவர் என மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கண் வழியாக மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவகுமார் உயிரிழந்தார்.

தாக்கியதற்காக சரவணனுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் விதிக்கப்பட்டிருக்கலாம்.

அடாவடியாக நடந்துகொண்டதற்கு சரவணனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை, $2,500 வரையான அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம்.

#சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்