'நோயாளிகளில் சிலர் மருத்துவமனைகளிலிருந்து சமூகத்தனிமைக்கு மாற்றப்படுவர்'

'நோயாளிகளில் சிலர் மருத்துவமனைகளிலிருந்து சமூகத்தனிமைக்கு மாற்றப்படுவர்'

2 mins read
57283f63-b79a-4a62-a623-84f48fd79979
பாசிர் ரிஸ்ஸில் உள்ள என்டியுசி டி'ரிசோட் ஓய்வுத்தளத்தில் புதிய தனிமைப்படுத்தப்படும் இடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 500 பேர் வரை தங்கவைக்கப்படலாம் என்றும் அமைச்சு விவரித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனோ கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும் நலமாக உள்ள நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து புதிய சமூக தனிமைப்படுத்தப்படும் இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அப்போதுதான் புதிய கிருமித்தொற்று சம்பவங்களை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் போதிய இடம் இருக்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாசிர் ரிஸ்ஸில் உள்ள என்டியுசி டி'ரிசோட் ஓய்வுத்தளத்தில் புதிய தனிமைப்படுத்தப்படும் இடம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதில் 500 பேர் வரை தங்கவைக்கப்படலாம் என்றும் அமைச்சு விவரித்தது.

"கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உலகெங்கும் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், சிங்கப்பூரிலும் அதே நிலை ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

"ஆகவே, நமது சுகாதாரப் பராமரிப்பு கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்," என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் நேற்று (மார்ச் 24) மாலை நடைபெற்ற அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"கடந்த சில நாட்களாக நாங்கள் சில நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இன்று நாங்கள் சமூக தனிமைப்படுத்தப்படும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம்," என்றும் திரு கான் கூறினார்.

தற்போது குணமாகி மருத்துவ பராமரிப்பிலிருந்து விடுவிக்கப்படும் நிலையில் இருந்தாலும் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இது மருத்துவமனை வளங்களை முறையாகப் பயன்படுத்துவதாகாது என்று சுகாதார அமைச்சு சொன்னது.

சமூக தனிமைப்படுத்தப்படும் வசதி தற்போதுள்ள அரசாங்க தனிமைப்படுத்தப்படும் வசதி போன்ற செயல்பாட்டு முறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

அங்கும் அந்த நோயாளிகளுக்கு நாள்தோறும் சோதனைகள் நடத்தப்படும் என்றும் சமூக தனிமைப்படுத்தப்படும் வசதிக்கான செலவை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்றும் அமைச்சு கூறியது.

#சிங்கப்பூர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்