வனவிலங்கு பாதுகாப்புக்கு புதிய சட்டத் திருத்தம்; குற்றவாளிகளுக்கு $50,000 வரை அபராதம், சிறைத் தண்டனை

வனவிலங்கு பாதுகாப்புக்கு புதிய சட்டத் திருத்தம்; குற்றவாளிகளுக்கு $50,000 வரை அபராதம், சிறைத் தண்டனை

3 mins read
49dab0be-5f12-4f09-8ed6-f615fc205de9
சிங்கப்பூரின் இயற்கை வனப்பைப் பாதுகாக்கும் நோக்கில் வன விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று (மார்ச் 25) அவை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

சிங்கப்பூரின் இயற்கை வனப்பைப் பாதுகாக்கும் நோக்கில் வன விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு, இன்று (மார்ச் 25) அவை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வனவிலங்கு சட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அந்தச் சட்டம், வனவிலங்குகளைப் பாதுகாப்பது, பொதுச் சுகாதாரம் அல்லது பாதுகாப்பு அல்லது சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றின் தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேம்பாட்டாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க தேசிய பூங்காக் கழகத்தின் (NParks) வனவிலங்கு நிர்வாகத்துக்கான நிர்வாக இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கும். இதன் மூலம் விலங்குகள் சாலைகளில் அடிப்பட்டு உயிரிழப்பது போன்றவற்றைத் தடுக்கும் உத்திபூர்வ நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க முடியும். வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, அவற்றை வெளியில் விடுவது போன்ற நடவடிக்கைகள் தீவு முழுவதும் சட்டவிரோதமாக்கப்படும். முன்பு, பூங்காக்களிலும் இயற்கை வனப்பகுதிகளிலும் இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமாகக் கருதப்பட்டன. புதிய சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும். வனவிலங்குகளை அனுமதியின்றி கொல்வது, பிடிப்பது, எடுப்பது, வைத்திருப்பது போன்றவற்றுக்கு தற்போது $1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ், பாதுகாக்கப்பட்ட வகை விலங்கினங்களின் தொடர்பில் இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு $50,000 வரை அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத்தண்டனை போன்றவை விதிக்கப்படலாம். 1965ல் வனவிலங்குகள் மற்றும் விலங்குகள் சட்டம் உருவாக்கப்பட்ட பிறகு அந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க திருத்தம் இது என நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் குறிப்பிட்டார். முன் மொழியப்பட்ட சட்டத் திருத்தங்களின் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை ஈராண்டுகளுக்கு மேலாக வன விலங்குகள் சட்ட மறு ஆய்வுக் குழு மேற்கொண்ட பிறகு, இந்த தனிநபர் சட்டத் திருத்த மசோதாவுக்கான முயற்சியை தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி செங் லி ஹுய் உடன் சேர்ந்து திரு இங் தொடங்கினார். திரு இங்கின் தலைமையிலான வன விலங்குகள் சட்ட மறு ஆய்வுக் குழுவில் இயற்கை மற்றும் விலங்குகள் நல சமூகங்கள், சமயத் தலைவர்கள், பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் அங்கம் வகித்தனர். பொதுவாக, இத்தகைய தனிநபர் மசோதாக்கள் அரிதானவை. இந்த மசோதாவில் தொடர்பில் பேசிய ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்களில் அறுவர் இந்தத் திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் வால்டர் தெசெரா இந்தத் திருத்தத்தின் நோக்கத்தை ஆதரித்தாலும் அந்தச் சட்டத்தின் செயற்பரப்பு குறித்து தெளிவுபடுத்துமாறு கேடுக்கொண்டார். மேம்பாட்டாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க தேசிய பூங்காக் கழகத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் தொடர்பில் அவர் அக்கறை தெரிவித்தார். இதன் தொடர்பில் அரசாங்கம் "விவேகமான அணுகுமுறையை" மேற்கொள்ளும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங் குறிப்பிட்டார். மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்வது குற்றமெனக் கருதப்படாது என்று திரு இங் மேலும் விளக்கமளித்தார். நாடாளுமன்றத்தில் தனது உரையின்போது, கடந்த ஆண்டு அக்டோபரில் மாரடைப்பால் உயிரிழந்த வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் ராஜதுரைக்கு அஞ்சலி செலுத்தினார். வனவிலங்குகள் தொடர்பான இந்த சட்டத் திருத்தத்தை வரைவதில் அவர் உதவியதாக திரு இங் குறிப்பிட்டார். மேலும், "சாந்திகொள்ளுங்கள், சுபராஜ். சிங்கப்பூருக்கு நீங்கள் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களது பணியும் மாயாஜாலங்களும் தொடரும். இந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் திருத்த மசோதாவை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார் திரு இங்.

#சிங்கப்பூர் #வனவிலங்கு பாதுகாப்பு

குறிப்புச் சொற்கள்