மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து பணியாற்றும் (தற்போது தற்காலிக தங்குமிட வசதிகளில் இருக்கும்) ஊழியர்களுக்கு நீண்ட காலத்துக்கு சாத்தியப்படக்கூடிய தங்கும் வசதிகளை ஏற்பாடு செய்யுமாறு மனிதவள அமைச்சு நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மலேசியாவில் இம்மாதம் 31ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மலேசியாவிலிருந்து இங்கு வந்து ஊழியர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதியை உருவாக்குவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் இரு வாரங்களுக்கு, அதாவது அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இன்று (மார்ச் 25) மலேசிய பிரதமர் அறிவித்தார்.
இந்நிலையில், தற்காலிக தங்குமிடங்களில் இருக்கும் மலேசிய ஊழியர்களுக்கான தங்குமிட வசதிக்கான ஆதரவு 31ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என சிங்கப்பூர் மனிதவள அமைச்சு இன்று தெரிவித்தது.
அதனையடுத்து, "பாதிக்கப்பட்ட ஊழியர்களை சிங்கப்பூரில் கட்டுப்படியாகக்கூடிய தங்குமிட வசதிகளுக்கு மாற்ற, நிறுவனங்களுடன் இணைந்து மனிதவள அமைச்சு செயல்படும்," என்று அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
"நீண்டகாலம் நீடித்திருப்பதற்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதாலும் ஊழியர்களுக்கு எந்த விதமான வீடமைப்பு தேவைப்படும் என்பதையும் கூடுதல் செலவுகளை ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வது பற்றியும் நிறுவனங்கள் முடிவு எடுக்க வேண்டும்," அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கட்டுப்படியாகக்கூடிய வீடமைப்பு தெரிவுகளுக்கு நிறுவனங்கள் மனிதவள அமைச்சின் இணையப்பக்கத்தை நாடலாம்; அல்லது மின்னஞ்சல் வழியாக தொடர்புகொள்ளலாம்.
#மலேசியா #வெளிநாட்டு ஊழியர்கள் #சிங்கப்பூர்

