#BYOBclean கிருமிநாசினி விநியோகம் 5 கேப்பிட்டாலேண்ட் மால்களில் நிறுத்தம்; பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்ய நடவடிக்கை

#BYOBclean கிருமிநாசினி விநியோகம் 5 கேப்பிட்டாலேண்ட் மால்களில் நிறுத்தம்; பாதுகாப்பான இடைவெளியை உறுதிசெய்ய நடவடிக்கை

2 mins read
713ab963-9a9d-4bb0-9283-d40e4383ca03
#BYOBclean முயற்சியின் கீழ் கிருமிநாசினியைப் பெற்றுக்கொள்ள பாசிரி ரிஸ் இலியாஸ் சமூக மன்றத்தில் பாதுகாப்பான இடைவெளியில் நின்றிருந்த குடியிருப்பாளர்கள். தீவு முழுவதுமுள்ள 109 சமூக மன்றங்கள், 11 கேப்பிட்டாலேண்ட் மால்கள் ஆகியவற்றில் கிருமி நாசினியை விநியோகிக்கிறது தெமாசெக் அறநிறுவனம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

#BYOBclean எனும் முயற்சியின் மூலம் சிங்கப்பூரில் சுமார் 1.5 மில்லியன் குடியிருப்பாளர்களுக்கு தலா 0.5 லிட்டர் கையைச் சுத்தப்படுத்தும் மதுசாரமற்ற கிருமிநாசினியை இலவசமாக வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தெமாசெக் அறநிறுவனம்.

'தயாராக இருங்கள்' எனும் முயற்சியின் அங்கமான இதனை, கொரோனா கிருமித்தொற்று பரவலை எதிர்த்துப் போரிட சிங்கப்பூரர்களுக்கு ஆதரவாக இந்தப் பணியை கடந்த 17ஆம் தேதி முதல் மேற்கொண்டுள்ளது அவ்வமைப்பு.

இந்த கிருமிநாசினியை இதுவரை பெற்றுக்கொள்ளாத குடியிருப்பாளர்கள், அவர்களுக்கு அருகில் உள்ள சமூக மன்றத்துக்கு சுத்தமான கலன்களை எடுத்துச் சென்று பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். இம்மாதம் 29ஆம் தேதி வரை கிருமிநாசினிகள் சமூக மன்றங்களில் விநியோகிக்கப்படும்.

அதனைத் தவறவிடுவோர், 11 கேப்பிட்டாலேண்ட் மால்களில் இம்மாதம் 30ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கைகள், கூட்டம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பிடோக் மால், புக்கிட் பாஞ்சாங் பிளாசா, ஜங்சன் 8, லாட் ஒன், தெம்பனிஸ் மால் ஆகிய இடங்களில் உள்ள 5 கேப்பிட்டாலேண்ட் மால்களில் நேற்று (மார்ச் 26) முதல் #BYOBclean முயற்சியின் கீழான கிருமிநாசினி விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.

இந்த ஐந்து தவிர சிங்கப்பூரின் மற்ற 11 கேப்பிட்டாலேண்ட் மால்களில் இலவச கிருமிநாசினியைப் பெற #BYOBclean அட்டை (வீடுகளுக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளன), சுத்தமான கலன் ஆகியவற்றைக் கொண்டு சென்று பெற்றுக்கொள்ளலாம். நேரத்தில் மாற்றமில்லை. வார நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் 9 மணி வரையும் வார இறுதிகளில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் விநியோகம் இருக்கும்.

வாரயிறுதிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வார நாட்களில் கூட்டமில்லாத நேர இடைவெளியில் (மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை) கிருமிநாசினியைப் பெற்றுக்கொள்ள குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

கொவிட்-19 நிலையை அணுக்கமாகக் கவனித்து வரும் தெமாசெக் அறநிறுவனம், ஏதாவது விநியோக நிலையங்களில்கூட்டம் அதிகமிருந்தால், 'பாதுகாப்பான இடைவெளியை' உறுதி செய்வதற்காக, மாற்று நேரங்களில் வந்து கிருமிநாசினியைப் பெற்றுக்கொள்ள வும் குடியிருப்பாளர்களை ஊக்குவிக்கிறது.

இது தொடர்பான மேல் விவரங்களுக்கு, இன்று (மார்ச் 27) முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை 1800-738-2000 என்ற நேரடி தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்