முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் கொவிட்-19 இல்லை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் கொவிட்-19 இல்லை

2 mins read
e5e1258f-f930-49e3-bb55-70489f988d97
சிறைக்கு வரும் புதிய கைதிகள் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டு 14 நாட்களுக்குக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களது உடல் வெப்பநிலை தினமும் இருமுறை பரிசோதிக்கப்படுவதாகவும் எஸ்பிஎஸ் தெரிவித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

மூடப்பட்ட சிறிய உறைவிடம், எந்நேரமும் தொடர்பில் இருப்பது போன்ற காரணங்களால் கொவிட்-19 போன்ற தொற்று நோய்கள் எளிதில் பரவக்கூடிய இடங்களில் ஒன்றாக சிறைச்சாலைகள் இருக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக. சிங்கப்பூர் சிறைச்சாலைகளில் கைதிகள், ஊழியர் என யாருக்கும் இதுவரை கொவிட்-19 தொற்று இல்லை என சிங்கப்பூர் சிறைச்சாலைச் சேவை (எஸ்பிஎஸ்) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கையாளுவதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஎஸ் பேச்சாளர் ஒருவர் தி நியூ பேப்பரிடம் தெரிவித்தார்.

"ஊழியர்கள், கைதிகள் ஆகியோரின் சுகாதாரம், நலவாழ்வு ஆகியவற்றை நாங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கிறோம். நல்ல தனிநபர் சுகாதாரப் பழக்கவழங்கங்களைக் கடைப்பிடிப்பது, சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வது ஆகியவற்றைப் பற்றி அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

சிறைக்கு வரும் புதிய கைதிகள் மற்ற கைதிகளிடமிருந்து தனியாக வைக்கப்பட்டு 14 நாட்களுக்குக் கண்காணிக்கப்படுவதாகவும் அவர்களது உடல் வெப்பநிலை தினமும் இருமுறை பரிசோதிக்கப்படுவதாகவும் எஸ்பிஎஸ் தெரிவித்தது.

சிறைக்கு புதிதாக வரும் கைதிகளைக் கையாளும் எஸ்பிஎஸ்-ன் முதல்நிலைப் பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் உட்பட தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைக்குள் ஏற்கெனவே இருக்கும் கைதிகளில் கொரோனா கிருமித்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்களைக் கையாளுவோரும் பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சிறைச்சாலை ஊழியர்கள், அங்கு வரும் பார்வையாளர்கள் ஆகிய அனைவருக்கும் உடல் வெப்பநிலைச் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் பல நாடுகளில் சிறைச்சாலை நிலவரம் வேறு விதமாக உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் சிறைகளில் இதுவரை தலா ஒருவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் உள்ள 10 சிறைச்சாலைகளில் மேலும் 19 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்து சிறைச்சாலை ஒன்றில் கொவிட்-19 அச்சம் காரணமாக பல கைதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) கலவரத்தில் ஈடுபட்டனர். தாய்லாந்து சிறைச்சாலையில் குறைந்தபட்சம் இரு கைதிகளுக்கு கொரோனா கிருமி தொற்றியிருப்பதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

#சிங்கப்பூர் #சிறைச்சாலை #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்