சிங்கப்பூரில் பெரும்பாலான இடங்களில் இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்; இஆர்பி தொடர்ந்து இயங்கும் இடங்களில் கட்டணத் தொகை குறைக்கப்படும்.
நகரமையத்தில் உள்ள அனைத்து இஆர்பி நுழைவாயில்களிலும் விரைவுச்சாலைகள், துணைச் சாலைகள் ஆகியவற்றில் உள்ள பல இஆர்பி நுழைவாயில்களிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படாது.
கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று காரணமாக சாலையைப் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று (மார்ச் 31) தெரிவித்தார்.
இதன் காரணமாக வழக்கமாக ஒவ்வொரு காலாண்டிலும் மறுஆய்வு செய்யப்படும் இஆர்பி கட்டணங்களை தற்போதே மறுஆய்வு செய்ய நிலப் போக்குவரத்து ஆணையத்திடம் தாம் கேட்டுக்கொண்டதாக அமைச்சர் கோ தெரிவித்தார்.
எனவே, அடுத்த திங்கட்கிழமையிலிருந்து பெரும்பாலான நேரங்களில் பல்வேறு இஆர்பி நுழைவாயில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது.
உதாரணத்துக்கு, மத்திய விரைவுச்சாலையில் நகரமையத்தை நோக்கி பயணம் செய்வோர் பிராடல் சாலையில் வெளியேறுவதற்கான சாலைக்கு முன்பு இருக்கும் இஆர்பி நுழைவாயிலில் காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. தற்போது அங்கே $1லிருந்து $2 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையில் அனைத்து நேரங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படாது.
77 இஆர்பி நுழைவாயில்களில் 74 நுழைவாயில்களில் வசூலிக்கப்படும் கட்டணம் $2 வரை குறைக்கப்படும்.
54 நுழைவாயில்களில் கட்டணம் வசூலிக்கப்படாது.
அப்பர் பூன் கெங் சாலை, தோ பாயோ லோரோங் 6, நார்த் போனா விஸ்டாவுக்குப் பிறகு உள்ள ஆயர் ராஜா விரைவுச்சாலை ஆகியவற்றுக்கான கட்டணங்களில் மாற்றம் இல்லை.
வாகனங்கள் ஓட்டுவதை ஊக்குவிப்பதற்காக இஆர்பி கட்டணம் குறைக்கப்படவில்லை என்று நிலப் போக்குரத்து ஆணையம் தெரிவித்தது. மாறாக, அத்தியாவசியமற்ற பயணங்களைத் தள்ளிவைக்கும்படி அது கேட்டுக்கொண்டது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர் கோ, இந்த நிலைமையைப் பயன்படுத்தி சாலைப் பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக அவர் கூறினார்.

