பிரதமர் லீ: நிலைமை கட்டுக்குள் இருக்கிறது; கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

பிரதமர் லீ: நிலைமை கட்டுக்குள் இருக்கிறது; கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

2 mins read
d0038149-7b90-42f7-8406-2372f12cf3fa
பிரதமரின் உரையை மக்கள் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வழியாகவும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம் வழியாகவும் கேட்கலாம். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சிங்கப்பூரில் கொவிட்-19 சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் லீ சியன் லூங், இன்று (ஏப்ரல் 3) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

"கொவிட்-19 தொடங்கியதிலிருந்து அந்த நெருக்கடியை நாம் அமைதியாகவும் முறையாகவும் முன்கூட்டியே திட்டமிட்டு, நிலைமை மாறும்போது அதற்கேற்ப நடவடிக்கைகளை மாற்றி சரிசெய்து கையாளுகிறோம்," என்று அந்தப் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் உரையை தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வழியாகவும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம் வழியாகவும் மக்கள் கேட்கலாம்.

"நமது உணவு வழங்கல் பாதுகாப்பாகவும் போதுமான அளவுக்கும் இருக்கிறது என்பதை நான் சிங்கப்பூரர்களுக்கு மீண்டும் உறுதிபடக் கூறுகிறேன். உங்களுக்கு என்ன தேவையோ அதை வாங்குங்கள், நீங்கள் அதிகம் வைத்திருந்தால் தேவைப்படுவோருக்கு அளியுங்கள். இந்த சவாலான காலகட்டத்தில் நாம் அனைவரும் அமைதியாக, ஒற்றுமையுடன் இருப்போம்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வாரத்தில் கொவிட்-19 சம்பவங்கள் 1,000ஐ தாண்டிவிட்டன. இதுவரை ஐவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, கடுமையான பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றை மூடுதல், சமயம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், வேலை மற்றும் பள்ளிகள் தவிர 10 பேருக்கு மேல் கூடாமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக அறிவித்தது. தற்போதைய நிலவரப்படி, இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 30 வரை நடப்பில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்