'கொரோனா, கொரோனா' என கத்தியபடி எச்சில் துப்பிய ஆடவருக்கு இரு மாதச் சிறை

2 mins read
bee788ed-d8f2-4477-9eb9-d3a9ca6a53b3
சாங்கி விமான நிலத்த்தில் இருக்கும் கிரௌன் பிளாசா ஹோட்டலில் மார்ச் 3ஆம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படம்: CROWNE PLAZA CHANGI AIRPORT -

சாங்கி விமான நிலையம் கிரவுன் பிளாசா ஹோட்டலில் உள்ள அஸுர் உணவகத்தில் தட்டை உடைத்து, தரையில் எச்சில் துப்பிய ஆடவருக்கு இரண்டு மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேரம் முடிந்துவிட்டதால் உணவகம் மூடப்பட்டுவிட்டதாக அதன் ஊழியர் கூறியதை அடுத்து ஜஸ்விந்தர் சிங் மெஹர் என்ற 52 வயது சிங்கப்பூரர் அப்படி நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அதன்பின் விமான நிலைய மூன்றாவது முனையத்தில் ஜஸ்விந்தரைக் கண்ட ஹோட்டல் பணியாளர் ஒருவர், அவரை ஹோட்டலின் முகப்பறைக்கு அழைத்துச் சென்றார். அப்போதும் கோபம் தணியாத ஜஸ்விந்தர் 'கொரோனா, கொரோனா' எனக் கத்தியபடி மேலும் இருமுறை தரையில் துப்பியதாகக் கூறப்பட்டது.

கடந்த மாதம் 3ஆம் தேதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கொரோனா கிருமிப் பரவலை அடுத்து, அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக தண்டிக்கப்பட்ட முதல் ஆள் ஜஸ்விந்தர்தான்.

வேறு ஒரு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் சிறையைவிட்டு வெளியே வந்தார். அத்துடன், பிப்ரவரி 26ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 26ஆம் தேதி வரை அவர் எந்தக் குற்றத்தையும் இழைக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தது. அதை மீறியதால் அவர் மேலும் 55 நாட்களைச் சிறையில் கழிக்கவேண்டும்.

சம்பவ நாளன்று காலை 10.30 மணியளவில் அந்த உணவகத்திற்குச் சென்ற ஐஸ்விந்தர், ஊழியரிடம் எதுவும் கூறாமல், 'புஃபே' வரிசையில் நின்று, ஒரு தட்டில் உணவை எடுத்ததாகக் கூறப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அவர் அந்த ஹோட்டலில் தங்கியிருந்தாரா என்பது தெரியவில்லை.

அதைக் கண்டதும் அந்த உணவகத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஜஸ்விந்தரிடம் சென்று, உணவகத்தின் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறினாராம். அதைக் கேட்டதும் ஜஸ்விந்தர் தட்டைப் போட்டு உடைத்ததோடு, துப்பிவிட்டும் சென்றார்.

அதன்பின் மூன்றாவது முனையத்தில் இருந்த ஜஸ்விந்தரை மீண்டும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் அதன் மேலாளர். முகப்பறைக்குச் சென்றதும் அங்கிருந்த ஓர் இருக்கையில் அமருமாறு அவரிடம் அந்த மேலாளர் சொன்னார். பின்னர் ஹோட்டலின் பாதுகாப்பு நிர்வாகியைத் தொலைபேசியில் அழைத்து அவர் விவரத்தைத் தெரிவித்தார்.

ஹோட்டல் நிர்வாகி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, தான் மேலும் பல தட்டுகளை உடைக்க விரும்புவதாகக் கூறியபடி உணவகத்தை நோக்கி ஜஸ்விந்தர் நடக்கத் தொடங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவரைத் தடுத்து நிறுத்திய ஹோட்டல் மேலாளர், அங்கு இருந்த சோஃபாவில் அவரை அமர வைத்தார்.

சோஃபாவில் அமர்ந்த ஜஸ்விந்தர், தமக்கு முன்பாக இருந்த மேசை மீது கால்களைத் தூக்கிவைத்ததாகவும் அதன்மீது இருந்த பிளாஸ்டிக் குறியீட்டை உதைத்ததாகவும் சொல்லப்பட்டது.

அதன்பிறகு, இருமுறை தரையில் துப்பிய அவர், 'கொரோனா, கொரோனா' எனவும் சத்தமிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து காலை 10.45 மணியளவில் போலிசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக ஜஸ்விந்தருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையும் $2,500 வரை அபராதமும் விதிக்கப்பட்டிருக்க முடியும்.

#சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்