கொவிட்-19: அறிகுறிகளைத் தெரிவித்து, ஆலோசனைகளைப் பெற இணையச் சேவை

2 mins read
bf8f9b1d-903a-4cc1-978b-29aa7415817e
இன்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்யப்பட்ட இதனை, தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் (NCID) ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள், கணினி ஆய்வாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு மாற்றத்துக்கான (MOHT) சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். படம்: SGCOVIDCHECK.COM -

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவோர், வீடுகளிலேயே இருக்க வேண்டுமா மருத்துவரைப் பார்க்க வேண்டுமா, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா அல்லது அவசர சிகிச்சை வாகனத்தை அழைக்க வேண்டுமா என்பது பற்றி முடிவெடுக்க உதவுகிறது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையச் சேவை ஒன்று.

'கொவிட்-19 அறிகுறிகள் பரிசோதனை' (Covid-19 Symptom Checker) என்று அழைக்கப்படும் இந்தச் சேவையில் தங்களது உடல்நிலையில் தெரியும் அறிகுறிகளைப் பதிவிட்டு ஆலோசனையைப் பெறலாம்.

இன்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்யப்பட்ட இதனை, தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் (NCID) ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள், கணினி ஆய்வாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு மாற்றத்துக்கான (MOHT) சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

வயது, அண்மைய வெளிநாட்டு பயண விவரம், அண்மையில் சந்தித்தவர்கள் பற்றிய விவரம், அறிகுறிகள் ஆகியவற்றைப் பயனாளர்கள் பதிவிட வேண்டும்.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில், வீட்டிலேயே இருப்பதா அல்லது மருத்துவ உதவியை நாடுவதா என்பது பற்றி பயனாளர்கள் ஆலோசனை பெறலாம்.

கிருமித்தொற்று கண்ட நால்வரில் ஒருவர், ஆரம்பகட்டத்தில் வெவ்வேறு மருத்துவர்களைப் பார்த்ததையடுத்து, இத்தகைய ஒரு சேவை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு சரியான தகவல்களை உரிய நேரத்தில் வழங்கவும், அதற்கேற்ற முடிவுகளை எடுக்கவும் இந்தச் சேவை உதவும் என்று தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் இணை ஆலோசகர் டாக்டர் குளோரிஜாய் டான் ஷி என் கூறினார்.

நோயாளிகளுக்குத் தேவையான சரியான தகவல்களை அளிப்பதன்மூலம், ஏற்கெனவே திணறிக்கொண்டிருக்கும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் மீதான சுமை குறையும் என NUHS குழும தலைமை மருத்துவ தகவல் அதிகாரியான இணைப் பேராசிரியர் ஜேம்ஸ் யிப் கூறினார்.

சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தும் அதே வேளையில், நோயாளிகளுக்கும் நல்ல பலன் கிடைக்க இந்த 'அறிகுறிகள் பரிசோதனை' சேவை உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் 23, 24 தேதிகளில் 69 பேருக்கு இந்தச் சேவையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இந்த பரிசோதனைச் சேவை மற்றவர்களின் பயன்பாட்டுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலானோர் பயன்படுத்தும்போது, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு இன்னும் துல்லியமான சேவைகளை வழங்க முடியும் என்று இதனை உருவாக்கிய குழு தெரிவித்தது.

சுகாதார அமைச்சின் இணையப்பக்கத்தில் கொவிட்-19 வளங்கள் பகுதியில் இந்தப் பரிசோதனைச் சேவையைப் பயன்படுத்தலாம். https://sgcovidcheck.com இணைப்பைச் சொடுக்கி அந்த பரிசோதனைச் சேவையைப் பயன்படுத்தலாம்.

#Covid-19 Symptom Checker

குறிப்புச் சொற்கள்