200 பேருக்குத் தற்காலிக வேலை கொடுக்கும் மனிதவள அமைச்சு

200 பேருக்குத் தற்காலிக வேலை கொடுக்கும் மனிதவள அமைச்சு

2 mins read
cd9182e8-cded-4c91-ab83-5caeeffc9f79
அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக விமானப் போக்குவரத்துத் துறை போன்ற பாதிக்கப்பட்ட மற்ற துறைகளையும் அமைச்சு சென்றடையும் . கோப்புப்படம் -

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் 200 பேருக்குத் தற்காலிக வேலை வழங்கி மனிதவள அமைச்சு உதவ இருக்கிறது.

ஹோட்டல் ஊழியர்களில் 20 பேரைக் கருத்தாய்வு நேர்காணல் செய்வோராகப் பணியமர்த்தியுள்ள மனிதவள அமைச்சு, மேலும் 180 வேலையிடங்களை நிரப்ப ஆள் தேடி வருகிறது என்று மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது நேற்று தெரிவித்தார்.

அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்காக விமானப் போக்குவரத்துத் துறை போன்ற பாதிக்கப்பட்ட மற்ற துறைகளையும் அமைச்சு சென்றடையும் என்றும் அவர் சொன்னார்.

மனிதவள அமைச்சின் 'விரிவான ஊழியரணி கருத்தாய்வு 2020' என்ற கருத்தாய்விற்காக நேர்காணும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.

"சுற்றுப்பயணிகள் வருகை குறைந்ததால் ஹோட்டல்களின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருத்தாய்வு செய்யும் பணிக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருப்பர்," என்று திரு ஸாக்கி முகம்மது குறிப்பிட்டார்.

"அவர்களில் பலரும் வாடிக்கையாளர் சேவை பணியை மட்டுமே செய்து வந்தனர். ஆனால், இப்போது அவர்கள் தரவுப் பகுப்பாய்வு குறித்து கற்று வருகின்றனர்; மக்களிடம் செல்வதோடு, புதிய தொழில்துறைகள் குறித்தும் கற்று வருகின்றனர். அவர்களுக்குப் பகுதி நேர வேலை மட்டும் கொடுக்காமல், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அதில் பயிற்சிபெறவும் வாய்ப்பு கொடுக்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

அடுத்த வாரத்தில் இருந்து நான்கு மாதங்களுக்கு அந்த ஊழியர்கள் கருத்தாய்விற்காக நேர்காணல் செய்யும் பணியில் ஈடுபடுவர். அவர்களுக்கு மாத ஊதியமாக மனிதவள அமைச்சு $2,500 வழங்கும். அத்துடன், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் விருப்பப்பட்டாலும் அவர்களுக்குத் தனியாக சம்பளம் வழங்கலாம்.

'எஸ்ஜி யுனைடெட்' வேலைத் திட்டத்தின்கீழ் தற்போது கிட்டத்தட்ட 3,000 வேலைகள் உள்ளன. அவை 'மெய்நிகர் வேலைச் சந்தை'யின் அங்கமாக SGUnited Jobs.gov.sg என்ற இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

#சிங்கப்பூர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்