டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒரு மாத வாடகையைத் தள்ளுபடி செய்யும் கம்ஃபர்ட்டெல்குரோ

டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒரு மாத வாடகையைத் தள்ளுபடி செய்யும் கம்ஃபர்ட்டெல்குரோ

2 mins read
2623c3a0-0418-40ff-8469-c062c71d4b7b
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தனது டாக்சி ஓட்டுநர்கள் ஏப்ரல் 7 முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை, சுமார் ஒரு மாத காலத்துக்கு வாடகை செலுத்த  வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தனது டாக்சி ஓட்டுநர்கள் ஏப்ரல் 7 முதல் மே மாதம் 5ஆம் தேதி வரை, சுமார் ஒரு மாத காலத்துக்கு வாடகை செலுத்த வேண்டியதில்லை என அறிவித்துள்ளது. அத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கும் முதல் நிறுவனம் இது.

சிங்கப்பூரில் அத்தியாவசியச் சேவைகள் அல்லாத வேலையிடங்களும் பள்ளிகளும் மூடப்பட உள்ளது குறித்து நேற்று பிரதமர் லீ சியன் லூங் தமது உரையில் குறிப்பிட்டதையடுத்து, இந்த அறிவிப்பை கம்ஃபர்ட்டெல்குரோ வெளியிட்டுள்ளது.

"பள்ளிகள், அத்தியாவசியச் சேவைகள் அல்லாத வேலையிடங்கள் மூடப்பட உள்ளதால் போதிய அளவுக்கு வருமனம் ஈட்ட எங்களது டாக்சி ஓட்டுநர்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியதிருக்கும். மொத்தமாக வாடகைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதால், அவர்கள் சம்பாதிக்கும் தொகை அவர்களது செலவுக்குப் பயன்படும். இந்தச் சிரமமான காலகட்டத்தில் இது அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்," என்று கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அங் வெய் நெங் கூறினார்.

வாடகைக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதால் அந்த நிறுவனத்துக்கு $19 மில்லியன் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஒரு டாக்சிக்கு ஒரு மாதத்துக்கு $1,700 என்ற விகிதத்தில் அந்த நிறுவனம் வாடகை வசூலித்து வருகிறது.

கொவிட்-19 சூழலைச் சமாளிக்க அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தினசரி வாடகை உதவி இந்த நான்கு வார காலத்தில் இருக்காது. மே மாதம் 5ஆம் தேதிக்குப் பிறகு இந்த தினசரி வாடகை உதவி தொடரும். இந்த உதவித் தொகுப்பு செப்டம்பர் மாதம் வரை நடப்பில் இருக்கும். கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஓட்டுநர்களுக்கான மொத்த உதவித் தொகுப்பு $99 மில்லியன் என்று நிறுவனம் தெரிவித்தது.

மற்ற டாக்சி நிறுவனங்களும் இதே போன்ற சலுகைகளை தங்களது ஓட்டுநர்களுக்கு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#சிங்கப்பூர் #கம்ஃபர்ட் டெல்கிரோ #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்