வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம்

வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம்

2 mins read
087f2ed0-93b6-49d1-9589-3377cb78c1de
தனிநபர்களும் வர்த்தகங்களும் தங்களது வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசத்தை வழங்கியுள்ளது சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தனிநபர்களும் வர்த்தகங்களும் தங்களது வருமான வரி கணக்கைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசத்தை வழங்கியுள்ளது சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (Iras).

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இம்மாதம் 7ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை கடுமையான பாதுகாப்பான இடைவெளி நடைமுறைகள் நடமுறைப்படுத்தப்படுவதால் இந்த அறிவிப்பை ஆணையம் வெளியிட்டது.

இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தனிநபர் வருமான வரித் தகவல் (தனித்த உரிமையாளர்கள் மற்றும் கூட்டாண்மை), அறநிறுவனங்கள், மன்றங்கள், சங்கங்கள் ஆகியவற்றின் வருமான வரித் தகவல், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு நிறுவனங்களின் கணிக்கப்பட்ட வரிசெலுத்துவதற்கான வருமான விவரம் போன்றவற்றை அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம்.

ஆணைய அதிகாரிகளை நேரடியாகச் சந்திக்க விரும்புவோர் குறைந்தது இரண்டு வேலை நாட்களுக்கு முன்பாக அதிகாரிகளிடம் அனுமதி கோர வேண்டும்.

அதேபோல, இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்துக்கு பொருள், சேவை வரி கணக்கைப் பதிவு செய்வதற்கான காலகட்டமும் மே மாதம் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது வருமான வரிகளைக் கட்டி முடிக்க ஒரு மாதகால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மே மாதம் 15ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டுமென்று முன்பு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல S45 படிவங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்துடன் தொடர்புகொள்ள விரும்புவோர் மின்னஞ்சல், இணைய வழி உரையாடல் சேவை போன்றவற்றை நாடலாம். ஆணையத்தின் myTax போன்ற மின்னியல் சேவைகளும் இணையப்பக்கமும் தொடர்ந்து சேவையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

#Iras #சிங்கப்பூர் #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்