வீடுகள், பொது இடங்களில் சமூக ஒன்றுகூடல், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அனுமதிக்கப்படாது என்று இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தனியார் விருந்து நிகழ்ச்சிகளோ ஒன்றுகூடல்களோ, நண்பர்கள், ஒரே வீட்டில் தங்கியிராத உறவினர்கள் ஆகியோருடன் பொது இடங்கள், வீவக வெற்றுத் தளங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் கூடுவதற்கு அனுமதியில்லை என்று கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) மசோதாவின் விவாதத்தில் அமைச்சர் கான் தெரிவித்தார்.
ஆனால், மூத்தோர்களைப் பராமரிக்க அவர்களைச் சென்று சந்திப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள குடும்பத்தாருக்குள் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் போன்ற அன்றாடத் தேவைகளுக்காக குடும்ப உறுப்பினர்களைச் சென்று பார்க்கத் தடையில்லை.
நாடாளுமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்கள் போன்றவற்றுக்குத் தடை செய்வது, அல்லது அவற்றை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதிப்பதற்கு அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது.
"இது தனியார் இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல்களை நல்ல முறையில் விதிமுறைப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் வழங்கும்," என்றார் திரு கான்.
கெரோனோ கிருமித்தொற்றுக்கு எதிரான பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் உள்ள திரு கான் கிம் யோங், இந்தச் சட்டம் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கடைப்பிடிக்க வேண்டிய தூர இடைவெளியை அமல்படுத்த சரியான சட்ட ரீதியிலான அதிகாரத்தை வழங்குவதாக விளக்கினார் அமைச்சர் கான்.
இந்தச் சட்டத்தின் கீழான நடவடிக்கைகள் தற்காலிகமானவை என்றும் அவை கிருமித்தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கம் கொண்டவை என்றும் கூறினார்.
மேலும், இந்த மசோதா பொதுமக்களுக்கான சுகாதாரப் பராமரிப்பு திறன்களை மேம்படுத்த தனியார் நிலம், சொத்து அல்லது சேவைகளைப் பயன்படுத்தவும் அரசாங்கத்துக்கு அனுமதி அளிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
அரசுக்கு இந்த சட்டத்தின்கீழ் வழங்கப்படும் அதிகாரங்கள் முறையாகப் பயன்படுத்தப்படும் என்று உறுதிகூறிய அமைச்சர் கான், இதில் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் அரசு அணுக்கமாகப் பணியாற்றும் என்றார்.
இந்தச் சட்டம், வேலையிடங்கள், பள்ளிகள், பொழுதுபோக்கு இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றை மூடவும் அமைச்சருக்கு அதிகாரம் வழங்குகிறது.

