எகிப்திலிருந்து திரும்பிய 224 சிங்கப்பூர்வாசிகள்; அதில் 211 பேர் மாணவர்கள்

2 mins read
9b275568-4b37-46f6-8b88-3a7c2444a9b8
சிங்கப்பூர்வாசிகள் இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கப்பூர் வந்தனர். சிங்கப்பூர் திரும்பிய 224 பேரில், 211 பேர் கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள். படம்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் ஃபேஸ்புக் பக்கம் -

எகிப்து அனைத்து வணிக விமான சேவைகளையும் நிறுத்திய பின்னர், மொத்தம் 224 சிங்கப்பூர்வாசிகள் கெய்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மூயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றத்துடன் இணைந்து சிங்கப்பூர்வாசிகள் நாடு திரும்ப விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு இன்று (ஏப்ரல் 8) தெரிவித்தது.

எகிப்து அனைத்து வணிக விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளதால், இந்த விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அது கூறியது.

சிங்கப்பூர்வாசிகள் இன்று அதிகாலை 2 மணியளவில் சிங்கப்பூர் வந்தனர். சிங்கப்பூர் திரும்பிய 224 பேரில், 211 பேர் கெய்ரோவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள்.

நாடு திரும்பியவர்கள் வீட்டிலேயே தங்கியிருப்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்வார்கள் என்று அமைச்சு கூறியது.

மாணவர்களும் பெற்றோர்களும் விமானப் பயணச் செலவை ஈடுசெய்ய ஜகாத் நிதியை ஒதுக்கியுள்ளதாக மூயிஸ் தெரிவித்தது.

மேலும், மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்வதை உறுதிசெய்ய அல்-அசார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணியாற்றுவதாகவும் மூயிஸ் தெரிவித்தது.

"மூயிஸ் உலக நிலைமையை தொடர்ந்து கண்காணிக்கும். வெளிநாட்டு இஸ்லாமிய பல்கலைக்கழகங்களில் படிக்கும் சிங்கப்பூர் மாணவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க வெளியுறவு அமைச்சுடன் அணுக்கமாகப் பணியாற்றும்" என்று அது கூறியது.

இன்னும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தனிப்பட்ட சுகாதாரத்தை அதிகரிக்குமாறும் மூயிஸ் கேட்டுக்கொண்டது. அத்துடன் வெளியுறவு அமைச்சுடன் மின்-பதிவு செய்யுமாறும் உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுமாறும் அது அறிவுறுத்தியது.

கொரோனா பரவல் அதிகரித்ததிலிருந்து கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை நிறுத்திவைத்துள்ளதாலும் அரசாங்கங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாலும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்