தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கும் உணவின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

2 mins read
11fb6295-36d1-4af5-8a9a-ebeb6baceb15
உணவு தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் 233,000 பொட்டலம் உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியிருப்பதாகவும், விடுதிவாசிகளின் உணவுத் தேவைகள்க்கேற்ப நிறுவனங்கள் உணவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. படம்: இபிஏ -

சிங்கப்பூரில் தங்கும்விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்த, உணவு தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்களுடன் சேர்ந்து மனிதவள அமைச்சு பணியாற்றி வருகிறது.

பொங்கோலில் இருக்கும் S11 தங்கும்விடுதி, டோ குவானில் இருக்கும் வெஸ்ட்லைட் தங்கும்விடுதி, டோ குவான் தங்கும்விடுதி ஆகிய மூன்று தனிமைப்படுத்தப்பட்ட விடுதிகளில் தங்கியிருக்கும் சுமார் 25,000 ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவது, உணவின் தரத்தை உறுதிப்படுத்துவது ஆகியவற்றின் தொடர்பில், உணவு தயாரித்து விநியோகிக்கும் பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதாக நேற்று (ஏப்ரல் 8) சுகாதார அமைச்சு தெரிவித்தது.

இந்த மூன்று தங்கும்விடுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று அதிகரித்துவரும் வேளையில், பலர் ஒரே இடத்தில் வசிக்கக்கூடிய, வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகள் அக்கறைக்குரிய கிருமித்தொற்று குழுமங்களாக உருவெடுத்துள்ளன.

ஊழியர்களிடம் கருத்து கேட்டு, அவர்களுக்கு கூடுதல் உணவு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சு தெரிவித்தது.

உணவு தயாரித்து விநியோகிக்கும் நிறுவனங்கள் 233,000 பொட்டலம் உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியிருப்பதாகவும், விடுதிவாசிகளின் உணவுத் தேவைகள்க்கேற்ப நிறுவனங்கள் உணவு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

"கடந்த மூன்று நாட்களில் உணவு வழங்கும் முறை குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்பட்டிருக்கிறது. மூன்று விடுதிகளிலும் ஒவ்வொரு வேளை உணவு வழங்கும் நடைமுறையும் இரண்டு மணி நேரத்துக்குள் முடிவடைகிறது," என்று அமைச்சு தெரிவித்தது.

இந்த தங்கும் விடுதிகளில் சுகாதாரப் பிரச்சினைகள், துப்புரவு பிரச்சினைகள் இருப்பதாக கடந்த திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

தங்கும் விடுதிகளின் நிலவரங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்ப்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.

வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதி நடத்துநர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் அமைப்புகளுக்கிடையிலான பணிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்