அங் மோ கியோவில் உள்ள மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு நேற்று (ஏப்ரல் 8) கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பள்ளி 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
புளோக் 541 அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள அந்தப் பள்ளிக்கு கடைசியாக அவர் கடந்த சனிக்கிழமை சென்றதாக ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இன்று முதல் இம்மாதம் 18ஆம் தேதி வரை துப்புரவுப் பணிகளுக்காக அப்பள்ளி மூடப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் அப்பள்ளியின் 11 ஊழியர்களும் பிள்ளைகளும் கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடர்கிறது.
நிலவரத்தில் மாற்றம் எதுவும் இல்லையெனில், இம்மாதம் 20ஆம் தேதி அப்பள்ளி திறக்கப்படும். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் துறைகளில் பண்புரியும் பெற்றோர்கள், அப்போது அவர்களது பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பலாம்.

