என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் இரண்டு பழச்சாறு பானங்களைத் திறந்து குடித்துவிட்டு வைக்கும் காணொளியைப் பதிவிட்ட 17 வயதுடைய இரு இளையர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
நைகல் பாங் இயூ, குவெக் சுவான் ஸி ஆகிய இருவர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்விரண்டு சிங்கப்பூர் இளையர்களும் புக்கிட் பாத்தோக் வெஸ்ட் அவென்யூ 7ல் இருக்கும் ஃபேர்பிரைஸ் கடையில் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
காணொளியில் ஓர் இளையர் ஒரு போத்தலை எடுத்துக் குடித்துவிட்டு அதே இடத்தில் வைக்கிறார். பிறகு மற்றொரு போத்தலை எடுத்துக் குடித்துப் பார்த்து, என்டியுசி ஊழியர் நடந்துபோவதையும் பொருட்படுத்தாது, புளிக்கிறது என்று கூறி வைக்கிறார்.
"வூஹானை எப்படிப் பரப்புவது' என்ற தலைப்பிடப்பட்ட இந்தக் காணொளியை ஒருவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அவரது நண்பர் அதனை மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
கொவிட்-19 பரவல் காலத்தில் இந்த காணொளி பொதுமக்களி டம் எச்சரிக்கையுணர்வை ஏற்படுத்தியுள்ளதாக போலிஸ் கூறியது. சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்றின் ஆரம்பகாலமான பிப்ரவரி 8ஆம் தேதி இச்சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இந்தக் காணொளி நகைச்சுவையாக எடுக்கப்பட்டது என்றும் அந்த பானங்களுக்குத் தாங்கள் பணம் செலுத்திவிட்டதாகவும் இருவரும் கூறினர். தங்கள் செயலுக்கு இருவரும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதம் வரை சிறை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

