குடும்ப வன்முறை, மனநலப் பிரச்சினைகளுக்கு உதவ தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு வசதி

குடும்ப வன்முறை, மனநலப் பிரச்சினைகளுக்கு உதவ தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு வசதி

2 mins read
5a2f26f8-26fa-4713-ae04-b2e54545f8c8
தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசி எண் 6202-6868. மனநலம், வன்முறை, தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கான மற்ற சிறப்பு சேவை உதவி தொலைபேசி அழைப்புகளுடன் இதுவும் செயல்படும். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்றால் உடல்நல பாதிப்பு ஒருபுறமிருக்க, அதன் தாக்கத்தால் மனதளவில் சோர்ந்துபோவோருக்கும் கவலைகொள்வோருக்கும் ஆறுதல் அளிக்க, தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசி அழைப்பு வசதி நிறுவப்பட்டுள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் இன்று (ஏப்ரல் 10) தெரிவித்துள்ளார்.

சுமார் 50 அமைப்புகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள், சமுதாயப் பணியாளர்கள், மனநல மருத்துவர்கள், பொதுத்துறை ஊழியர்கள் ஆகியோர் இந்த 24 மணி நேர நேரடி அழைப்புச் சேவையில் இருப்பர்.

"கொவிட்-19 பற்றிய கவலை, குடும்பங்களிலும் வாழ்க்கையிலும் அதன் தாக்கம், வேலை, வாழ்க்கை, எதிர்காலம் என பல்வேறு அம்சங்களின் தொடர்பில் யாருடனாவது உங்களது மனபாரத்தை இறக்கிவைத்து ஆறுதலாகப் பேச விரும்பினால், இந்த சேவை உதவும். நீங்கள் தனியாக சிரமப்படத் தேவையில்லை," என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

உணர்வுபூர்வமாக ஆறுதலளிக்கும் விதத்தில் பேசும் அதிகாரிகள், தேவைப்படும்பட்சத்தில் சமுதாய சேவை முகவைகள், சிறப்புச் சேவைகள் போன்றவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பர்.

நெருக்கடியான இந்தக் காலகட்டத்தில் சிக்கப்பூரர்கள், குறிப்பாக சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களின், மனநலம் மீட்சித் திறம் ஆகியவற்றை அரசாங்கம் மிகவும் கவனத்துடன் கண்காணித்து வருவதாக திரு லீ முன்பு குறிப்பிட்டிருந்தார்.

தேசிய பராமரிப்பு நேரடி தொலைபேசி எண் 6202-6868. மனநலம், வன்முறை, தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கான மற்ற சிறப்பு சேவை உதவி தொலைபேசி அழைப்புகளுடன் இதுவும் செயல்படும்.

உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதால் சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிப்பதாக சமுதாயப் பணியாளர்களும் ஆலோசனைக் குழுக்களும் அக்கறை தெரிவித்தன.

கொரோனா கிருமிப் பரவல் தொடங்கிய பிறகு குடும்ப வன்முறை, வீடுகளில் சண்டைகள், சச்சரவுகள் போன்றவை அதிகரித்திருப்பதாக இந்த வாரத் தொடக்கத்தில் திரு டெஸ்மண்ட் லீ நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்புச் சொற்கள்