கொரோனா கிருமிப் பரவலுக்கு எதிரான போரில் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கைகள் மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியவை, பொருளியலை பாதிக்கக்கூடியவை என்று பிரதமர் லீ சியன் லூங் இன்று (ஏப்ரல் 10) தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர்வாசிகள் அதிக கண்டிப்புடன் பின்பற்றினால், அவை விரைவில் பலனளிக்கும், அவ்வளவு விரைவாக இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்று கூறிய பிரதமர், அனைவரும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார். இன்று (ஏப்ரல் 10) ஃபேஸ்புக் வழியாக நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஆக அதிகமாக 287 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.
பொதுவான சமூகத்திலும் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்று கூறிய பிரதமர், "அவர்கள் எப்படி, யாரிடமிருந்து கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்று நமக்குத் தெரியவில்லை. ஆக, அவர்களுக்குக் கிருமித்தொற்றைப் பரப்பிய நபர்கள், இன்னும் வெளியே நடமாடிக் கொண்டிருக்கலாம்; இன்னும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்றைப் பரப்பிக் கொண்டிருக்கலாம்," என்றார்.
முதியோர் கொரோனா கிருமியால், மேலும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர், "நமக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு, நாம் அதனை நமது வயதை ஒத்த நமது நண்பர்களுக்குப் பரப்பினால், அல்லது, நமது குடும்பங்களுக்குப் பரப்பினால், நாம் அவர்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடும்," என்றார்.
பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள, தாத்தா - பாட்டியின் உதவி தேவைப்பட்டால், இந்தக் காலகட்டத்தில், பிள்ளைகளை அவர்களுடனேயே தங்க விடுமாறு கூறிய பிரதமர், "தினந்தோறும், அவர்களை விட்டுச் சென்று, பின்னர் அழைத்து வரவேண்டாம்," என்றும் கேட்டுக்கொண்டார்.
அடுத்த சில வாரங்கள் மிகவும் கடுமையானவையாக இருக்கும் என்று கூறிய பிரதமர், சூழலை விளக்க அவ்வப்போது ஃபேஸ்புக் மூலம் மக்களுடன் உரையாட இருப்பதாகவும் தெரிவித்தார்.
"நம்மில் சிலர், இந்த நடவடிக்கைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றத் தவறினால், நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான இந்த அதிரடித் திட்டம் தோல்வியடைந்து விடும். பின்னர், நமது அசெளகரியம், வலி, தியாகம் அனைத்தும் வீணாகிவிடும்," என்றார் பிரதமர்.
தொடர்புடைய செய்திகள்
"நீங்கள் ஒவ்வொருவரும், நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டத்தை மிகவும் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளவேண்டும். வீட்டிலேயே இருங்கள்; பிறருடனான நேரடித் தொடர்பை நிறுத்திவிடுங்கள்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
"நிலைமை மேம்படுவதற்கு முன்னர், மேலும் மோசமாகும்," என்று குறிப்பிட்ட பிரதமர், "ஆனால், நாம் இதனைக் கடந்து சென்றால்தான், நம் வாழ்க்கையில் மீண்டும் ஒளி வீசும். நாம் அனைவரும் அந்த நிலையை விரைவில் எட்ட, தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள்," என்றார்.
இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 11) அச்சுப் பிரதியை நாடுங்கள்!
நீங்கள் சந்தாதாரரானால் தமிழ் முரசு நாளிதழ் வீடுகளுக்கே விநியோகிக்கப்படும். இ-பேப்பரும் வாசிக்கலாம். மேல் விவரங்களுக்கு: https://www.sphsubscription.com.sg/eshop/?r=products/newsubscriptionpackages&pcode=tm


