சிங்கப்பூரில் நடப்பில் உள்ள, கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே இருக்கும் நிலையில், சிலர் அவ்வாறு இருப்பது சிரமான செயல் என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், இந்தச் சூழலிலும் ஒரு குடும்பம் ஆடி, பாடி கொண்டாடியுள்ளது.
ஏன் தெரியுமா?
சரவண மூர்த்தி என்பவர் கடந்த மாதம் 26ஆம் தேதி, வேலை நிமித்தம் ஜப்பானுக்கு சென்று திரும்பியதால் அவர், 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
தற்போது நடப்பில் இருக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக, அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல முடியும்; ஆனால், சரவண மூர்த்தியால் அப்படிகூட வெளியில் செல்ல முடியாத நிலை. வீட்டுக்குள்ளேயே ஓர் அறையில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், குழந்தைகளுடனும் குடும்பத்தாருடனும்கூட உறவாட இயலாத நிலையில் இருந்தார்.
(காணொளியை முழுமையாகக் காண முழுத்திரை பொத்தானை அழுத்தவும்.)
அனைத்து வெளிவேலைகளையும் அவரது மனைவி சுபாஷினி இளஞ்செழியனே மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது.
இந்நிலையில், சரவண மூர்த்தியின் 14 நாட்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏப்ரல் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இதனை ஒரு நினைவுகூரத்தக்க நிகழ்வாக மாற்றவும், வீட்டின் சோம்பியிருந்த சூழலை உற்சாகப்படுத்தவும் விரும்பினார் சுபாஷினி.
'மாரி' தமிழ் திரைப்படத்தில் நடிகர் தனுஷின் அறிமுகக் காட்சி போல, தனது கணவர் வீட்டிலிருந்து வெளியில் வருவதை ஆட்டம், பாட்டு, தாளத்துடன் காணொளியாக்கி ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார் அவர்.
அந்தக் காணொளியில் குத்தாட்டம் போட்டபடி வெளியில் வரும் சரவண மூர்த்திக்கு, மனைவி மாலை அணிவிப்பதும் பிள்ளைகள் மேளம் கொட்டி வரவேற்பதுமாக அமர்க்களப்படுத்தியிருந்தனர்.
மாதிரியாக அமைந்த மாரி படப் பாடலின் திரைப்படக் காட்சிக்கு: https://www.youtube.com/watch?v=MnPK6kLFqeQ&feature=emb_title
இனிமேல், அத்தியாவசியத் தேவைகளுக்காக தாம் வெளியில் செல்ல வேண்டியதில்லை; கணவர் செல்லலாம் என்றும் சுபாஷினி தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

