முற்றிலும் கொவிட்-19 நோயாளிகளுக்காகத் தயாராகியுள்ள பிரைட் விஷன் மருத்துவமனை

முற்றிலும் கொவிட்-19 நோயாளிகளுக்காகத் தயாராகியுள்ள பிரைட் விஷன் மருத்துவமனை

2 mins read
878609ab-4713-4f99-a0e6-6ba540dffe06
இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் பிரைட் விஷன் மருத்துவமனையிலிருந்து 110 நோயாளிகள் அருகில் இருக்கும் சமூக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று கண்ட, குணமடைந்து வரும், அதே சமயம் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் கொவிட்-19 நோயாளிகளுக்காக பிரத்தியேக மருத்துவமனையாகிறது பிரைட் விஷன் மருத்துவமனை.

இயோ சூ காங் ரோட்டில் இருக்கும் பிரைட் விஷன் மருத்துவமனையிலிருந்து 110 நோயாளிகள் அருகில் இருக்கும் சமூக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அங் மோ கியோ-தை ஹுவா குவான் மருத்துவமனை, செங்காங் சமூக மருத்துவமனை ஆகியவற்றுக்கு பிரைட் விஷன் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மாற்றப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனைப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகளால் நிர்வகிக்கப்படும் பிரைட் விஷன் மருத்துவமனையில் அதிகபட்சமாக 200 கொரோனா கிருமித்தொற்று நோயாளிகளைச் சேர்த்துக்கொள்ள முடியும்.

சிங்ஹெல்த் சமூக மருத்துவமனைகளின் தலைமை நிர்வாகி திருவாட்டி மார்கிரட் லீ, "நாட்டின் மருத்துவ வளங்களைத் திறம்பட பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் அதிகரித்து வரும் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொது சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு அனுமதிப்பதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொண்டோம்," என்றார்

சுகாதார அமைச்சு, நோயாளிகள் மற்றும் மருத்துவப் பராமரிப்பு வழங்குவோர் ஆகியோருடன் அணுக்கமாகச் செயல்பட்டு நோயாளிகளை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றியதாக திருவாட்டி லீ கூறினார்.

கொவிட்-19 நோயாளிகளைப் பராமரிக்கும் முறை குறித்து பிரைட் விஷன் மருத்துவமனையின் மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்திருப்பதாகவும் நோய்த் தொற்றும் அபாயத்தைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 5ஆம் தேதி முதல் சீமெய்யில் இருக்கும் செயின்ட் ஆண்ட்ரூஸ் சமூக மருத்துவமனையும் கொவிட்-19 நோயாளிகளைக் கையாளுகிறது. அங்கு 60 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.

நலமுடன் இருக்கும், ஆனால் கிருமித்தொற்று கொண்டிருக்கும் 1,316 கொவிட்-19 நோயாளிகள் சமூக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.

குணமடைந்து வரும் 450 கொவிட்-19 நோயாளிகள் சிங்கப்பூர் எக்ஸ்போவில் இருக்கும் இரண்டு கூடங்களில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சுகள்நிலை பணிக்குழு தெரிவித்தது. இன்னும் நான்கு கூடங்கள் படிப்படியாக பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படும்.

குறிப்புச் சொற்கள்