உள்துறைக் குழு பயிலகம், குடிமைத் தற்காப்புப் பயிலகம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 700 வெளிநாட்டு ஊழியர்கள்

கிட்டத்தட்ட 700 வெளிநாட்டு ஊழியர்கள் தற்காலிகமாக உள்துறைக் குழு பயிலகம் (எச்டிஏ), குடிமைத் தற்காப்புப் பயிலகம் (சிடிஏ) ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களில் சிலரை வேறு இடங்களில் தங்கவைக்கும் திட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கோல் நார்த்தில் இருக்கும் நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி உட்பட, கல்வி அமைச்சின் நான்கு வளாகங்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்படுவர் என்று கூறப்பட்டது.

ஜாலான் புசாரில் இருக்கும் சிடிஏ வெளிநாட்டு ஊழியர் தங்கும் புளோக்கில் இம்மாதம் 9ஆம் தேதி முதல் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்பட்டனர். தற்போது அங்கு 300 ஊழியர்கள் இருப்பதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் நேற்றைய (ஏப்ரல் 15) அறிக்கை தெரிவித்தது.

“வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று அதிகரித்து வருவதையடுத்து, கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஓர் அங்கமாக இது உள்ளது,” என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஓல்ட் சுவா சூ காங் ரோட்டில் இருக்கும் எச்டிஏவின் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி புளோக்கில் இதுவரை சுமார் 370 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடுபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

“தேவை ஏற்பட்டால் இன்னும் அதிகமானோரை எச்டிஏவில் தங்கவைக்க இயலும்,” என்று அதன் பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

பயிற்சிப் பள்ளிகளின் நடவடிக்கைகள் இதனால் பாதிக்கப்படவில்லை என எச்டிஏ, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவை தெரிவித்தன.

பயிலகங்களில் பயிற்சிகள் தொடரும் அதே வேளையில், பாதுகாப்பான இடைவெளி, தினசரி உடல் வெப்பநிலைப் பதிவு போன்ற விரிவுபடுத்தப்பட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

சிடிஏ பயிற்சியாளர்களுக்கும் போதுமான இட வசதி இருக்கிறது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

நார்த்ஷோர் தொடக்கப்பள்ளி தவிர, டெய்ரி ஃபார்ம் மற்றும் லேப்ராடர் ஆகிய இடங்களில் உள்ள வெளிப்புற சாகப் பயிற்சி நிலையங்கள் (OALCs), லிம் சூ காங்கில் உள்ள சரிம்பன் ஸ்கௌட் முகாம் ஆகிய கல்வி அமைச்சின் வளாகங்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இளையர்களுக்காக செய்முறைக் கல்வி வழங்கும் சரிம்பன் ஸ்கௌட் முகாம் 12 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

போதிய அளவுக்கு மாணவர் சேர்க்கை இல்லாததால நார்த்ஷோர் தொடக்கப்பள்ளியின் திறப்பு 2021க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரியில் அது செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்தத் தற்காலிக தங்கும் வளாகங்களில் சுகாதார, பாதுகாப்பு நடைமுறைகள் நடப்பில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் தனிமைப்படுத்தப்படுவது, தேவையானபோது வீட்டிலேயே இருக்கும் அறிவிப்பு போன்றவையும் அந்த நடவடிக்கையில் அடங்கும். ஆனால், அந்த வளாகத்தில் தற்போது எத்தனை ஊழியர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை.

அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் வேலையிடங்களுக்குச் சென்று தங்குமிடத்துக்குத் திரும்ப மட்டுமே அனுமதி உள்ளது. அத்தியாவசியமற்ற சேவைகளில் பணிபுரிவோர் தங்குமிடங்களிலேயே தங்கியிருப்பர் என்று கல்வி அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் உள்ள 43 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் 17ல் தற்போது கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன; அவற்றில் 9 தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் இருப்போரில் 7,000 பேர் ராணுவ முகாம்கள், மிதக்கும் விடுதிகள், காலியான வீடமைப்புக் கழக புளோக்குகள் போன்றவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிருமிப் பரவலைக் கையாளும் அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, பொதுச் சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த வாரம் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!