கிருமித்தொற்றிலிருந்து மீண்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைக்க சொகுசுக் கப்பல்கள் மதிப்பீடு

கிருமித்தொற்றிலிருந்து மீண்ட வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைக்க சொகுசுக் கப்பல்கள் மதிப்பீடு

2 mins read
569e94ba-3447-4e13-9c83-abbac9773c27
சாத்தியமெனில், இரண்டு சொகுசுக் கப்பல்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மீண்ட வெளிநாட்டு ஊழியர்களின் தற்காலிகத் தங்குமிடமாக சொகுசுக் கப்பல்களைப் பயன்படுத்தும் சாத்தியம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது.

சூப்பர்ஸ்டார் ஜெமினி, சூப்பர்ஸ்டார் அக்வேரியஸ், 'ஜென்டிங் குரூஸ் லைன்ஸ்' நிறுவனத்தின் நடுத்தர அளவிலான சொகுசுக் கப்பல்கள் ஆகியவை பரிசீலனையில் உள்ளன. அவற்றில் காற்றோட்ட வசதிகள், பாதுகாப்பு நெறிமுறைகள், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற காரணிகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சாத்தியமெனில், இரண்டு சொகுசுக் கப்பல்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சுகாதார நடவடிக்கைகளைத் திறம்படச் செயல்படுத்த முடியும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இன்று (ஏப்ரல் 17) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

சொகுசுக் கப்பல்களில் கழிப்பறை வசதியுடன் கூடிய அறைகள் தயார்நிலையில் இருப்பதால் தனிமனிதர்களுக்கு இடையிலான தொடர்பைக் குறைக்க முடியும் என்றும் அதனால் அவற்றைத் தற்காலிகத் தங்குமிடங்களாகப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கை கூறியது.

ஹாங்காங்கில் இருந்து சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்த சூப்பர்ஸ்டார் ஜெமினி சொகுசுக் கப்பல் சிங்கப்பூர் மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் அக்வேரியஸ் சொகுசுக் கப்பலில் இன்னொரு நாளில் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறக்கூடும்.

தற்காலிகமாகத் தங்கவைக்க உகந்த இடமாகக் கருதப்பட்டால் அவ்விரு கப்பல்களிலும் சேர்த்து அதிகபட்சம் 2,000 ஊழியர்களைத் தங்கவைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

"சொகுசுக் கப்பல்களில் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கவைக்கப்படும் பட்சத்தில், அந்த ஊழியர்களின் சுகாதாரம், நல்வாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அங்கு எல்லா நேரத்திலும் அவர்கள் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்," என்று பயணத்துறை கழகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

குறிப்புச் சொற்கள்