பொது இடங்களில் முகக்கவசங்கள் அணியாததற்கு இன்று (ஏப்ரல் 17) சுமார் 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை நேற்று நடப்புக்கு வந்தது. ஆனால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 50 பேருக்கு நேற்று அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகங்களில் உணவருந்தியது, பொது இடங்களில் சுற்றித்திரிந்தது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மேலும் 150 பேர் அபராதங்களை எதிர்நோக்குவதாக சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் ஒரு மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் சமூகப் பொறுப்புடன் வீட்டில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பெரும்பாலானோரின் முயற்சியை நாம் வீணடிக்க வேண்டாம் என்றார்.
பொது இடங்களுக்குச் சென்று கண்காணிக்கும் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு திரு மசகோஸ் கேட்டுக்கொண்டார்.
நேற்று முதல் நடப்புக்கு வந்த விதிமுறையின்படி, முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்குச் செல்வோருக்கு $300 அபராதம் விதிக்கப்படும்.
ஆயினும், சிறார், சிறப்புத் தேவையுடையோர் போன்றவர்களுக்கு இந்த நடைமுறைகள் தளர்த்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.


