கொவிட்-19: சிங்கப்பூரில் 11வது மரணம்; மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டது

கொவிட்-19: சிங்கப்பூரில் 11வது மரணம்; மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தனிமைப்படுத்தப்பட்டது

2 mins read
391b8654-ce18-4dcb-b04f-ea9cdcde67c5
கிராஞ்சி லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியையும்  தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். இன்று முதல் அது நடப்புக்கு வந்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 சிக்கல்களால் 95 வயது சிங்கப்பூரர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சின் நேற்றைய (ஏப்ரல் 17) அறிக்கை தெரிவித்தது. கிருமித்தொற்றால் இங்கு உயிரிழந்த 11வது நபர் அவர்.

அவரது குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகளை ராஃபிள்ஸ் மருத்துவமனை வழங்கி வருவதாகவும் அமைச்சு தெரிவித்தது.

நேற்று சிங்கப்பூரில் உறுதி செய்யப்பட்ட 623 புதிய கிருமித்தொற்று சம்பவங்களில் 558 பேர் விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

புதிய தரவுகளின்படி ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் 323,000 பேரில் ஒரு விழுக்காட்டினர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று உள்ளூர் சமூகப் பரவல் தொற்று 27 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தங்கும் விடுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் தங்கியிருக்கும் 37 வேலை அனுமதிச்சீட்டு கொண்டிருப்போருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

தவிர, மலேசியாவிலிருந்து வந்த ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிரைட் விஷன் மருத்துவமனையில் பணிபுரியும் தாதியான அவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலேசியரான அந்த 34 வயது மாது ஜனவரி 29 முதல் ஏப்ரல் 8 வரை அவர் மலேசியாவில் இருந்தார்.

கடந்த வியாழக்கிழமை அவருக்கு அறிகுறிகள் தென்பட்டன. அவர் தற்போது தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறிகுறிகள் தென்பட்ட பிறகு அவர் வேலைக்குச் செல்லவில்லை.

நேற்றைய நிலவரப்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2,113 பேர் இல் 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்றைய சம்பவங்களில் 31 விழுக்காட்டு சம்பவங்கள் முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாதவை.

நேற்று மேலும் நான்கு புதிய கிருமித்தொற்று குழுமங்களை சுகாதார அமைச்சு அறிவித்தது.

அவற்றில் மூன்று வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள் தொடர்பானவை. சிங்கப்பூரில் இருக்கும் 43 அத்தகைய விடுதிகளில் 22ல் கிருமித்தொற்று குழுமங்கள் உள்ளன.

பொங்கோலில் இருக்கும் எஸ்11 தங்கும் விடுதியில் நேற்று 144 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு மொத்தம் 1,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிராஞ்சி லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியையும் தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். இன்று முதல் அது நடப்புக்கு வந்துள்ளது.

இதனையடுத்து, தற்போது 13 விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வசிக்கும் ஊழியர்கள் 14 நாட்களுக்கு அறைகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

உள்ளூர் சமூகத்தில் கண்டறியப்படும் புதிய கிருமித்தொற்று சம்பவங்களில், தொடர்புகளைக் கண்டுபிடித்து கிருமித்தொற்று பரவியதற்கான மூலத்தை அடையாளம் காண்பது சிரமமாக இருப்பதாக சுகாதார அமைச்சு கவலை தெரிவித்தது.

சமூகத்தில் முந்தைய சம்பவங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. கடந்த வாரத்தில் சராசரியாக 22 அத்தகைய சம்பவங்கள் பதிவாகின. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த சராசரி 19 ஆக இருந்தது.

தனியார் மருந்தகங்கள், பலதுறை மருந்தகம் போன்ற முதல்நிலை சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் சில கிருமித்தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்