ஊழியர் தங்கும் விடுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதால், இன்னும் சில நாட்களுக்கு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகள், மனிதவள அமச்சு, சுகாதாரப் பராமரிப்புத்துறை மருத்துவர்கள், தாதியர் என பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கிருமித்தொற்று கண்டவர்களிடமிருந்து நலமாக இருப்பவர்களை அடையாளம் காணும் இந்தப் பணி அனைவரது நலவாழ்வையும் உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
கிருமித்தொற்று கண்ட வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினர் எனவும் அவர்களுக்கு மிதமான அறிகுறிகளே தென்படுவதாகவும் குறிப்பிட்ட திரு வோங், வெப்பநிலைப் பரிசோதனையிலிருந்து மட்டும் அவர்களது கிருமித்தொற்று கண்டறியப்படவில்லை என்றார். மேலும், அதிகாரிகள் கடுமையாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிருமித்தொற்று கண்ட ஊழியர்களைப் பராமரிப்பதற்கு சிங்கப்பூர் எக்ஸ்போ மற்றும் வேறு சமூகப் பராமரிப்பு வளங்கள் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கிருமித்தொற்றிலிருந்து குணமடைவோரைத் தங்க வைக்க அரசாங்கம் கூடுதல் இடங்களைத் தயார்ப்படுத்தி வருவதாகவும் திரு வோங் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு நோயாளிகள் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 பிரச்சினை இந்த ஆண்டிறுதிக்குப் பிறகும் தொடரலாம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய கிருமித்தொற்று அலைகளையும் கையாள, ஒரு நீண்ட போராட்டத்துக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் இரவு, பகலாக அயராது பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்ட திரு வோங், வீட்டிலேயே இருந்து, அனைவரும் ஒன்றிணைந்து இந்தச் சூழலைக் கடப்போம் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திரு வோங்.

