அமைச்சர் சண்முகம்: தங்கும்விடுதிகளில் தொற்று பற்றிய வாசகர் கடிதத்தில் புரிந்துணர்வு இல்லை

அமைச்சர் சண்முகம்: தங்கும்விடுதிகளில் தொற்று பற்றிய வாசகர் கடிதத்தில் புரிந்துணர்வு இல்லை

2 mins read
42469d52-0a3a-45c0-a405-173faf9519f5
சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் நாட்டின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான காரணவாதிகள் இந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறி அவர்களின் பங்களிப்பையும் அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டிருந்தார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகளில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 கிருமிப் பரவலுக்கும் ஊழியர்களின் தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறைக்கும் தொடர்புள்ளதாக வாசகர் கடிதம் ஒன்று 'சாவ்பாவ்' நாளிதழில் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டது.

இக்கடிதம் குறிப்பிட்ட ஒரு சாராருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதாக உள்ளது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று (ஏப்ரல் 17) கூறியிருந்தார்.

இங்கு வெளிநாட்டு ஊழியர்களிடையே கொவிட்-19 கிருமித்தொற்று ஏன் ஏற்பட்டது என்பதற்கான புரிந்துணர்வு அக்கடிதத்தில் இல்லை என்று அவர் கூறினார்.

நாளிதழுக்குக் கடிதம் எழுதியிருந்த வாசகர் லீ ஷிவான், தங்கும்விடுதிகளில் கிருமிப் பரவல் ஏற்படுவதற்கு வெளிநாட்டு ஊழியர்களே காரணம் என்றும் ஒன்றாகக் கூடிக்கொண்டு தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணாமல் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். பின்தங்கிய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு ஊழியர்கள் 'கைகளால் சாப்பிடுவது, மரத்தடியில் சாப்பிடுவது' போன்ற பழக்கவழக்கங்களையும் கொண்டுவருவதாக வாசகர் கூறியிருந்தார்.

கடந்த சில நாட்களாக நாட்டின் கிருமித்தொற்று சம்பவங்களில் பெரும்பான்மை தங்கும்விடுதிகளில் ஏற்படும் சம்பவங்களாக உள்ளன. எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் பதிவாகி வருகின்றன.

வெளிநாட்டு ஊழியர்கள் சமூகச் சூழலில் வசிப்பதால் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கின்றனவே தவிர, ஒருவரது தனிப்பட்ட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் காரணம் அல்ல என்று 'சாவ்பாவ்' சீன செய்தித்தாளிடம் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

"பலரையும் ஒரே இடத்தில் வசிக்கச் செய்து, ஒரே அறையில் உறங்கவிட்டு, கூட்டுச் சமையலில் ஈடுபடச் செய்து, நீண்ட நேரத்திற்கு அருகருகே இருக்க விட்டால், கிருமித்தொற்று பெருமளவில் ஏற்படுவது நிச்சயம். வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கிருமித்தொற்று ஏற்படுவது போன்றதுதான்," என்றார் அமைச்சர்.

அத்துடன் ஒருவரையொருவர் குறைகூறாமல் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க சிங்கப்பூரர்கள் ஒன்றாகத் திரண்டு வரவேண்டும் என்றார் அவர்.

சிங்கப்பூரைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் நாட்டின் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புக்கான காரணவாதிகள் இந்த வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறி அவர்களின் பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூரர்கள் அன்பு, கருணை மற்றும் தாராள குணமுடையவர்கள் என்று கூறிய அமைச்சர் சண்முகம், "கடிதத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளைக் காட்டிலும் நாம் பெருந்தன்மை கொண்டவர்கள்," என்றார்.

குறிப்புச் சொற்கள்