தற்போது தங்கும் விடுதிகளில் இருக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் மே மாதம் 4ஆம் தேதிவரை வேலை செய்ய அனுமதியில்லை.
கிருமிப் பாதிப்புக்கு அதிகம் ஆளாகியுள்ள இவர்களது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக நேற்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.
அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும் என்று அவர் விளக்கினார்.
அதன்படி கிருமிப் பரவலுக்கான அதிரடி நடவடிக்கைகள் நடப்பில் உள்ள காலகட்டத்தில் தொடர்ந்து இயங்க உரிமம் பெற்றிருந்த நிறுவனங்களும் இனி நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.
இதனால் நிறுவனங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
இருப்பினும் இப்புதிய நடவடிக்கை தொடர்பில் முதலாளிகள், ஊழியர்கள் என இருதரப்பினரது ஒத்துழைப்பும் தேவை என்று அமைச்சர் டியோ கேட்டுக்கொண்டார்.
கிருமிப் பரவலின் அபாயத்தைக் குறைக்க இது ஒரு முக்கிய நடவடிக்கை என்று அவர் சுட்டினார்.
இது இன்றிலிருந்து நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
இதற்கிடையே ஊழியர்களின் நலனை உறுதிசெய்திட தங்கும் விடுதிகளே நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் முதலாளிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது.
சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

