அடையாள அட்டை எண் கொண்டு சந்தைகளில் அனுமதி

இங்குள்ள நான்கு பிரபலமான ஈரச்சந்தைகளுக்குச் செல்ல இனி வாடிக்கையாளர்களது அடையாள அட்டையில் இருக்கும் இறுதி எண் பயன்படுத்தப்படும்.

ஒருவரது அடையாள அட்டை எண்ணில் இறுதி எண் ஒற்றைப்படையாக இருந்தால், அவர் மாதத்தின் ஒற்றைப்படை தேதிகளில் மட்டுமே ஈரச்சந்தைக்குள் அனுமதிக்கப்படுவார். அதே போல இரட்டைப்படை எண் இருந்தால் மாதத்தின் இரட்டைப்படை எண் கொண்ட தேதி களில் ஒருவர் ஈரச்சந்தைக்குள் அனுமதிக்கப்படுவார்.

கேலாங் சிராய் சந்தை, புளோக் 104/105 ஈசூன் ரிங் ரோட்டில் அமைந்திருக்கும் சோங் பாங் சந்தை, புளோக் 20/21 மார்சிலிங் லேனில் உள்ள சந்தை மற்றும் ஜூரோங் வெஸ்ட் 52, புளோக் 505ல் இருக்கும் சந்தை ஆகியவற்றில் இப்புதிய நடவடிக்கை இன்று முதல் நடப்புக்கு வருகிறது.

இந்நிலையில் முதியோர் மற்றும் உடற்குறை உள்ளோருக்கு உதவி தேவைப்பட்டால் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது வீட்டுப் பணிப்பெண் அவர்களுடன் சந்தைக்குச் செல்லலாம். இருப்பினும் இருவரில் ஒரு வரது அடையாள அட்டை இறுதி எண் ஒற்றைப்படை, இரட்டைப்படை விதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று அமைப்பு தெரிவித்தது.

இத்தகைய கிருமித் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் வழி பொதுமக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதுடன் சமூகத்தில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.

“ஈரச்சந்தைகளிலிருந்து நாம் இதைத் தொடங்குவோம். பின்னர் பேரங்காடிகள் போன்ற மக்கள் அதிகமாகச் செல்லும் இடங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளைக் கொண்டு வருவோம். இதனால் கூட்டம் குறைவதுடன் கிருமிப் பரவல் சாத்தியத்தையும் குறைக்கலாம்,” என்றார் அவர்.

அத்துடன் உணவு, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் உடற் பயிற்சி செய்வதற்கும் மற்றவர்   களுடன் சேர்ந்து போக வேண்டாம் என்றும் சிங்கப்பூரர்களை அமைச்சர் வோங் கேட்டுக்கொண்டார்.
கூடுதல் வேலையிடங்கள் அடைப்பு

தற்போது மூடப்பட்டுள்ள வேலையிடங்களுடன் மேலும் சில வேலையிடங்கள் மூடப்படும் என்று அமைச்சர் வோங் நேற்று தெரிவித்தார்.

நாட்டில் நடப்பில் உள்ள அதிரடி கிருமித் தடுப்பு நடவடிக்கைகளின் போது அத்தியாவசிய சேவை வழங்குவோர் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். இதன்படி சிங்கப் பூரின் ஊழியரணியில் சுமார் 20 விழுக்காட்டினர் வேலைக்காக பயணம் செய்கின்றனர். இது 15 விழுக்காடாக குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சொன்னார். 

கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் நடப்புக்கு வந்த பிறகு சமூகத்தில் பதிவான கிருமித்தொற்று சம்பவங்களில் பல, அத்தியாவசிய சேவைகளில் உள்ளவர்கள் அல்லது அவற்றில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டவையாக இருந்தன. இதனால் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் பட்டியலைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக திரு வோங் கூறினார். 

நடப்பில் உள்ள அதிரடி நட  வடிக்கைகளால் இதுவரை எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு இருந்தாலும் கொவிட்-19 கிருமிக்கு எதிரான போராட்டம் நீண்ட காலமாக இருக்கும் என்றும் சிங்கப்பூர் தொடர்ந்து நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் திரு வோங் கூறினார்.

“பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற முன்னெச்     சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினாலும் வீட்டில் இருப்பதுதான் கிருமியை ஒழிக்க சிறந்த வழி,” என்றார் அமைச்சர்.

சமூகத்தில் கிருமிப் பரவல் ஏற்படும் எண்ணிக்கை ஒற்றை எண்ணாகக் குறைந்தால் நடப்பில் உள்ள கிருமித் தடுப்பு நடவடிக்கைகளை மெல்ல தகர்த்திடலாம் என்றும் திரு வோங் தெரிவித்தார்.

சிங்கப்பூரிலும் உலக அளவிலுமான அண்மைய கொவிட்-19 செய்திகளுக்கு எங்களுடைய பிரத்தியேக செய்திப் பக்கத்தை நாடுங்கள்: www.tamilmurasu.com.sg/coronavirus

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon