விவேகமான கொரோனா கிருமி: சுகாதார நிபுணர்கள் கருத்து

விவேகமான கொரோனா கிருமி: சுகாதார நிபுணர்கள் கருத்து

3 mins read
67e09fef-8122-4fba-ab85-24692c57cdf7
வெஸ்ட்லைட் பாப்பான் ஊழியர் தங்கும் விடுதியில் ஏப்ரல் 21 அன்று ஊழியர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கிருமி மனிதர்களைத் தொற்றி, நோயை ஏற்படுத்தும் திறன் பெற்ற விவேகமான கிருமி எனசுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகையால், அந்த விவேகமான கொரோனா கிருமியால் ஏற்படும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு நீக்குப்போக்காக இருக்கவேண்டியது அவசியம் என்று அந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.

"கொரோனா கிருமி உண்மையிலேயே விவேகமானதுதான். நம் கண்ணை மறைக்கும் இடங்களுக்குள் அது புகுந்துவிடுகிறது. எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்களைக் கண்டுபிடித்து, தொற்றி விடுகிறது. நாம் என்னதான் தடுப்பு முயற்சிகளை எடுத்தாலும் அதிகம் பரவ வாய்ப்புள்ள இடங்களை அது கண்டறிந்து விடுகிறது," என்றார் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய்கள் நிபுணரான பேராசிரியர் டேல் ஃபிஷர்.

தாதிமை இல்லங்களிலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வருவதைக் குறிப்பிட்டு, பேராசிரியர் ஃபிஷர் இவ்வாறு கூறினார்.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் தொற்றை எதிர்கொண்ட அனுபவம் சிங்கப்பூருக்கு இருந்தபோதும் இரு வேறு கிருமித்தொற்றுகள் ஒரே மாதிரியாக இருக்காது என்று தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் குறிப்பிட்டார்.

"இது, சார்ஸில் இருந்து மிக மிக வேறுபட்டது," என்றார் அவர்.

"எந்தவொரு சவாலையும், அது எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது ஒட்டுமொத்த அமைப்பும் நீக்குப்போக்காக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்," என்று அவர் தெரிவித்தார்.

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் நான்கு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதற்கான அவசியத்தை மக்கள் அறிந்திருக்க வேண்டியதும் முக்கியம் என்றும் பேராசிரியர் லியோ சொன்னார்.

நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் செயல்திறன்மிக்கதாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவது ஊக்குவிப்பதாக இருந்தாலும், புதிய தொற்றுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்தபடி விரைவாகக் குறையவில்லை என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சா சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் கல்வித் துறைத் தலைவரும் பேராசிரியருமான திரு டியோ யிக் யிங்.

சமூகத்தில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் இன்னும் இருப்பது குறித்து தமது அதிருப்தியை தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியொ யீ சின் தெரிவித்தார்.

ஆனால், மற்ற நாடுகளின் அனுபவத்தை வைத்து பார்க்கும்போது புதிய கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறை இரண்டு வார கால முயற்சிகள் மட்டும் போதாது என்றார் அவர்.

வரும் ஜூன் மாதம் முதல் தேதி வரை கிருமிப் பரவல் முறியடிப்பு அதிரடி நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கவில்லை என்று இருவரும் குறிப்பிட்டனர்.

"இந்தக் கிருமி மனிதர்களுக்கிடையே இருக்கவும் தொடர்ந்து பரவவும் வழி கண்டுபிடித்து, நம்முடன் தொடர்ந்து இருக்கும் திறன் வாய்ந்தது," என்று குறிப்பிட்ட பேராசிரியர் லியோ, "நாம் எளிதாக சமாளித்துவிடக்கூடிய விதத்திலான எளிய கிருமியல்ல இது. நமக்குத் தெரியாமலேயே அது மற்றவர்களுக்குப் பரவும் தன்மை வாய்ந்தது," என்றார்.

கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்ற கேள்விக்கு, "நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், தற்போது நடப்பில் இருக்கும் கிருமிப் பரவல் முறியடிப்பு அதிரடி நடவடிக்கைகள் மீட்டுக்கொள்ளப்பட்ட பிறகு, கிருமி மீண்டும் வரும்," என்றும் பேராசிரியர் லியோ எச்சரித்தார்.

கொரோனா கிருமி பற்றிய புதிய தகவல்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் வேளையில் கொள்கை மாற்றங்களுக்கு மக்கள் தயாராக வேண்டியதும் அவசியம் என்று அந்த மூன்று நிபுணர்களும் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்