இல்லப் பணிப்பெண்கள் 17 பேருக்கு கொவிட்-19

இல்லப் பணிப்பெண்கள் 17 பேருக்கு கொவிட்-19

2 mins read
f082a41a-98f1-43e3-a85b-096c8b811672
சிங்கப்பூரில் இதுவரை 17 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து கிருமி பரவவில்லை. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இதுவரை 17 வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; அவர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து கிருமி பரவவில்லை.

கிருமித்தொற்று கண்ட பெரும்பாலான இல்லப் பணிப்பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் வீடுகளில் வசிப்போரிடமிருந்து கிருமி தொற்றியிருப்பதாக தி நியூ பேப்பரின் கேள்விக்கு சுகாதார அமைச்சு பதிலளித்தது.

மொத்தமுள்ள 17 சம்பவங்களில் 3 விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ் கிருமித்தொற்று குழுமத்துடன் தொடர்புடையவை.

அந்த பணிப்பெண்களின் முதலாளிகள் விஸ்லேர்ன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தனர்; அல்லது அங்கு பணிபுரிபவகளுடன் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

மற்றொரு இந்தோனீசியப் பணிப்பெண்ணின் முதலாளி சிங்கப்பூரில் முதலில் உருவான கிருமித்தொற்று குழுமங்களின் ஒன்றான யோங் தாய் ஹாங் சுகாதாரப் பராமரிப்புப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையின் ஊழியர். அந்த கிருமித்தொற்று குழுமம் இப்போது இல்லை.

விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்களிடையே கிருமித்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இவ்வேளையில், விடுமுறை நாட்களில் அவர்களுடன் தொடர்பில் இருக்கும் இல்லப் பணிப்பெண்களுக்கும் கிருமித்தொற்று இருக்கலாம் என்ற வதந்தி பரவி வந்தது.

அவ்வாறு இல்லப் பணிப்பெண்களுக்குப் பரவினால், அவர்கள் பணிபுரியும் வீட்டில் இருப்பவர்களுக்கும் எளிதில் பரவிவிடும் என்று குறிப்பிடும் வாட்ஸ்அப் செய்தி ஒன்று பரவலாக வலம் வந்தது.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தி, லியன்ஹ சாவ் பாவ் செய்தித் தாளுக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், இல்லப் பணிப்பெண்கள் வெளியில் செல்ல முடியாது என்று குறிப்பிட்டதுடன் இல்லப் பணிப்பெண்களிடையே கிருமித்தொற்று எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றார்.

இல்லப் பணிப்பெண்கள் அத்தியாவசியத் தேவையிருந்தாலன்றி வெளியில் செல்லக்கூடாது என்றும் தங்களது விடுமுறை நாட்களிலும் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 11ஆம் தேதி மனிதவள அமைச்சு அறிவுறுத்தியிருந்தது.

குறிப்புச் சொற்கள்