இங்குள்ள ஐந்து முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் இனிமேல் 'என்டியுசி ஃபேர்பிரைஸ்', வாகன வடிவில் வலம் வருகின்றன.
கொரோனா கிருமித்தொற்று பரவலால் மக்கள் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் நிலையைச் சமாளிக்கவும் வாடிக்கையாளர்களின் பயண நேரத்தைக் குறைக்கவும் இப்புதிய திட்டம் உதவும் என்று கூறப்படுகிறது.
காமன்வெல்த் லிங்கின் புளோக் 109க்கும் 110க்கும் இடையே உள்ள கார் நிறுத்துமிடம், தெலுக் பிளாங்கா கிரெசன்ட்டின் புளோக் 1 மற்றும் 4க்கு இடைப்பட்ட வாகனம் நிறுத்துமிடம், தெலுக் பிளாங்கா ரைசில் உள்ள புளோக் 29 மற்றும் 32 இடையே உள்ள கார் நிறுத்துமிடம், கம்போங் கிளாம் சமூக மன்றம் அருகே உள்ள புளோக் 15ல் உள்ள அஞ்சல் நிலையம் முன்னால் இருக்கும் கார் நிறுத்துமிடம் மற்றும் ஜாலான் குக்கோவிலுள்ள புளோக் 2 முன் உள்ள கார் நிறுத்துமிடம் ஆகியவற்றில் இந்தப் பேரங்காடி வாகனங்கள் நிறுத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களிலும் 30 விழுக்காட்டுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மூவறை வீடுகளில் வவசிப்பவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் இச்சேவை மூலம் பொருட்களை வாங்குவோர் ரொக்கமாக கட்டணம் செலுத்த வேண்டும். இத்திட்டம் விரிவுபடுத்தப்படலாம் என்றும் வாகனங்கள் மற்றும் நிறுத்துமிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்ட வாகனங்கள் மூலம் அனைவரும் பொருட்களை வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. பேரங்காடியின் ஊழியர்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பர்.


