தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தவறான பயணத் தகவல்களை வழங்கிய பிரிட்டிஷ் நாட்டவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றம்; அவர் மீண்டும் வர தடை

2 mins read
1dff415a-529e-4cfd-b053-325888fdf050
நேற்று அந்த ஆடவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இன்று அவர் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டார். அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. -

சிங்கப்பூர் நிரந்தரவாசியைத் திருமணம் முடித்த பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் தனது வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவலை குடும்ப நீதிமன்றத்தில் தவறாக அளித்ததையடுத்து அவர் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பொதுத்துறைப் பணியாளரிடம் பொய்யான தகவலை அளித்ததற்காக அந்த 60 வயது ஆடவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர் மீண்டும் சிங்கப்பூருக்கு வர முடியாது என்று போலிஸ், குடிநுழைவு மற்றும் சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவை இணைந்து இன்று (ஏப்ரல் 26) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இந்தச் சம்பவம் குறித்து மார்ச் மாதம் 26ஆம் தேதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது.

அதற்கு முந்தைய தினம் அந்த ஆடவர் குடும்ப நீதிமன்றத்திற்கு ஆவணம் ஒன்றைப் பெறச் சென்றிருந்தார். அங்கு, கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது வெளிநாட்டுப் பயணம் குறித்த தகவல்கள் கோரப்பட்டன.

அதற்கு முந்தைய 14 நாட்களுக்கு தாம் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டதையடுத்து அவர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் மார்ச் 13ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியிருந்தார்.

விசாரணைகளுக்குப் பிறகு, தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. நேற்று அந்த ஆடவருக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் இன்று அவர் ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டார். அவர் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார, பயண அறிவிப்புகளை கடுமையானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறிய போலிசார், துல்லியமான விவரங்களை அளிக்க வேண்டும் என பொதுமக்களை போலிசார் கேட்டுக்கொண்டனர். பொய்யான தகவல்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்