கொவிட்-19ஆல் சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு உதவ பல்வேறு நிறுவனங்களும் அமைப்புகளும் முன்வந்துள்ளன.
$5 மில்லியன் மதிப்பிலான 300,000 பராமரிப்புப் பொட்டலங்களை வழங்கும் 'புரொக்டர் & கெம்பல்' (பி&ஜி) நிறுவனம்:
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நிவாரண உதவித் திட்டமாக ஐந்து மில்லியன் மதிப்பிலான 300,000 பராமரிப்புப் பொட்டலங்களை 'புரொக்டர் & கெம்பல்' (பி&ஜி) நிறுவனம் நன்கொடையாக வழங்குகிறது.
இத்திட்டத்தின் தொடர்பில் மனிதவள அமைச்சு, தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் ஆகியவற்றுடன் பி&ஜி நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் மற்றும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்தப் பராமரிப்புப் பொட்டலங்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் நேற்று (ஏப்ரல் 25) தெரிவித்தது.
பொட்டலங்கள் வரும் வாரங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் நிலையத்தின் உதவியுடன் தங்கும் விடுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
"வெளிநாட்டு ஊழியர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எடுத்துள்ள கூடுதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக நாங்களும் பங்களிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்," என்றார் பி&ஜி நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான திரு மகேஸ்வரன் சுரஞ்சன் பகிர்ந்து கொண்டார்.
800 பீங்கான் குவளைகளை வழங்கிய ஈக்கியா:
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி வரும் Itsrainingraincoats என்ற அமைப்பிடம் ஒரு நன்கொடையாளர் பல கார்ட்டன் பால் பொட்டலங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்காக வழங்கினார்.
ஆனால், அந்த பால் பொட்டலங்களை ஊழியர்களுக்கு விநியோகித்தபோது, பாலை ஊற்றி அருந்த, ஊழியர்கள் பலரிடம் குவளைகள் இல்லாததை அது அறிந்தது.
உடனடியாக, தமது நன்கொடையாளர்கள் சிலரிடம் இது குறித்து தெரிவித்து உதவி கோரியது Itsrainingraincoats அமைப்பு.
அதனையடுத்து, ஊழியர்களுக்காக 800 பீங்கான் குவளைகளையும் நொறுக்குத் தீனி கார்ட்டன்களையும் அனுப்பி வைத்தது ஈக்கியா. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தளவாடப் பொருட்களை விற்கும் கடைதான் ஈக்கியா.
7,000 சாக்லேட் உணவுப் பைகளை வழங்கிய OUE & The Cocoa Trees:
புளூ ஸ்டார் ஊழியர் தங்கும் விடுதி, லியோ ஊழியர் தங்கும் விடுதி ஆகியவற்றைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களுக்காக சுமார் 7,000 சாக்லேட் உணவுப் பைகளை வழங்கின இரு நிறுவனங்கள். உள்நாட்டு சாக்லேட் விற்பனை நிறுவனமான The Cocoa Trees, சொத்துச் சந்தை நிறுவனமான OUE ஆகியவை இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.
கிண்டர் மினிஸ், ஹெர்ஷே'ஸ் கிஸ்ஸஸ், ஹவாயன் ஹோஸ்ட் மெகடாமியா நட்ஸ் சாக்லேட்ஸ், கெட்பரி மில்க் பார், டோப்லெரோன் மினிஸ் போன்ற பல சாக்லேட்டுகள் அந்தப் பைகளில் இருந்தன.
சிங்கப்பூருக்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த அன்பளிப்பை வழங்குவதாக நன்கொடையாளர்கள் குறிப்பிட்டனர் என லியோ விடுதியின் நடத்துநரான எம்இஎஸ் நிறுவனம் தெரிவித்தது.
இந்த சாக்லேட் பொட்டலங்களைத் தயார்ப்படுத்தி விநியோகிக்க மூன்று வாரங்களானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடுதிகளின் குடியிருப்பாளர்களுக்கு எஸ்ஜி கார் கிளப் கிருமிநாசினிகளை வழங்கியுள்ளது.
அரசாங்கம் ஊழியர்களுக்கு முகக்கவசம் வழங்கியுள்ளது.
விடுதிகளில் தங்கியிருப்போருக்கு பொழுதுபோக்கு அம்சங்களான விளையாட்டுச் செயலிகள் போன்றவற்றை அந்த விடுதி நிர்வாகம் வழங்கியுள்ளது.

