சிங்கப்பூரில் இம்மாதம் 10ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு எண்ணுக்கு இரண்டு வார காலத்தில் 6,600க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று (ஏப்ரல் 29) தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 380 அழைப்புகள் வந்ததாக இது கருதப்படும். தினந்தோறும் வரும் மொத்த அழைப்புகளில் 40 விழுக்காடு அல்லது 170 அழைப்புகள் பயிற்சி பெற்ற நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எஞ்சிய அழைப்புகள் சிறப்புத் தேவை உள்ளோருக்கான உதவி அமைப்புகளுக்கு மாற்றிவிடப்பட்டன.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் உளவியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த 24 மணி நேர சேவையில் கிட்டத்தட்ட 500 தொண்டூழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.
உளவியல் நிபுணர்கள், ஆலோசகர்கள், சமூக ஊழியர்கள், மனநல மருத்துவர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட 22 முதல் 25 பேர் வரையிலான குழு எட்டு மணி நேர கணக்கில் நாளுக்கு மூன்று முறைமாற்று (ஷிஃப்ட்) அடிப்படையில் சேவையாற்றுகிறது. இந்த நெருக்கடி காலத்தில் வெவ்வேறு சவால்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் வரும் அழைப்புகள் தனித்துவமிக்கது என்றும் அவர் கூறினார்.
தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு எண்ணுக்கு வரும் அழைப்புகளைக் கையாளும் 500 தொண்டூழியர்களில் மாதவி மாணிக்கவாசகமும் ஒருவர். ஆதரவு நாடி அழைத்தவர்களில் மூதாட்டி ஒருவர் பேரங்காடியிலிருந்து குறிப்பிட்ட ஒரு உணவுப்பொருள் தமக்குத் தேவைப்படுவதாக அழுதவாறே திரும்பத் திரும்ப கேட்டதாக உளவியல் நிபுணரான குமாரி மாதவி, 37, கூறினார்.
சமூக உளவியல் நடுவம் என்னும் அமைப்பின் மூத்த ஆலோசகரான அவர், பகல் நேர மூன்று ஷிஃப்டுகளில் 18 முதல் 20 வரையிலான அழைப்புகளை கையாண்ட தாகத் தெரிவித்தார்.
"அந்த மூதாட்டியின் கோரிக்கை மிகச் சாதாரணமானது என ஒதுக்கிவிடக் கூடியதாகத் தோன்றும். ஆனால் கொரோனா கிருமி சூழலில் தனியாகவும் அச்சத்துடனும் அவர் இருக்கிறார் என்பதே அடிப்படை உண்மை.
"எனது தந்தையைக் கவனித்துக்கொள்ள நானும் எனது சகோதரியும் உள்ளோம். ஆனால், ஒருவரையும் சார்ந்திராத ஏராளமான மூத்தோர் இந்த சமூகத்தில் உள்ளனர்," என்றார் திருவாட்டி மாதவி.
இவரைப் போன்ற மற்றொரு தொண்டூழியரான நூர் ஆக்கிலா அப்துல் லத்தீப், 42, என்பவர் ஆடவர் ஒருவரின் அழைப்பு தம்மைப் பாதித்ததாகக் குறிப்பிட்டார்.
கொவிட்-19 சூழல் தமது வேலை தேடும் முயற்சிகளைப் பாதித்துவிட்டதாகவும் குடும்பத்துடனான தமது உறவும் சரியாக இல்லை என்றும் அந்த ஆடவர் கூறியதாகத் தெரிவித்தார் திருவாட்டி ஆக்கிலா.
வீட்டிலேயே இருக்க வேண்டியுள்ளதால் வெளியில் சென்று வேலைதேட இயலாமல் மனஉளைச்சல் இரட்டிப்பாகிவிட்டதாக அந்த ஆடவர் புலம்பியதாக திருவாட்டி ஆக்கிலா பகிர்ந்துகொண்டார்.

