வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு மற்றும் பொருட்களை வழங்க ஏராளமான அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இதனால் நன்கொடைகளை ஒருங்கிணைக்க அரசாங்க சார்பற்ற அமைப்புகளுடனும் சமூக ஆர்வலர்களுடனும் சேர்ந்து மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் நிலையம், கொவிட்-19 வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவு அமைப்பு, கிரைசிஸ் ரிலீஃப் அலையன்ஸ், அலையன்ஸ் ஆஃப் கெஸ்ட் வொர்க்கர்ஸ் அவுட்ரீச் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து நன்கொடை ஒருங்கிணைப்புக் குழு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்தக் குழு 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு நாள்தோறும் முகக்கவசங்கள், உணவு தேவைப்படுவோருக்கு உணவு போன்றவற்றை வழங்கி வருகிறது என்று இன்று (ஏப்ரல் 29) வெளியிட்ட அறிக்கையில் மனிதவள அமைச்சு குறிப்பிட்டது.
இதற்கிடையே கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்க விரும்புவோர் www.sgunited.gov.sg/donate என்ற இணையப் பக்கத்தின் வழியாக நன்கொடைகளை வழங்கலாம் என்றும் அறிக்கை தெரிவித்தது.

