கொரோனா தாக்கம்: சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு குறைந்தது

கொரோனா தாக்கம்: சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு குறைந்தது

2 mins read
5b0559f6-a843-4929-90b2-d05b576f4cb0
உள்ளூர் வேலைவாய்ப்பு இன்னும் மிதமான வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக நேற்று (ஏப்ரல் 29) மனிதவள அமைச்சு வெளியிட்ட முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் பொருளியல் நடவடிக்கைகளை சீர் குலைத்ததால், சிங்கப்பூரில் பணிப்பெண்களைத் தவிர, ஊழியர்கள் எண்ணிக்கை ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெருமளவு சரிந்தது.

வேலைவாய்ப்பில் ஏற்பட்டுள்ள 19,900 வீழ்ச்சியானது, 2003ன் இரண்டாவது காலாண்டில் சார்ஸ் நோய் பரவலால் ஏற்பட்ட 24,000 வேலைவாய்ப்பு வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான சரிவாகும்.

எனினும், கடந்த காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஏற்பட்ட கணிசமான குறைவே காரணம்.

உள்ளூர் வேலைவாய்ப்பு இன்னும் மிதமான வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருவதாக நேற்று (ஏப்ரல் 29) மனிதவள அமைச்சு வெளியிட்ட முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதங்கள் உயர்ந்தன. அதே சமயம் காலாண்டுக்கு காலாண்டு அடிப்படையில் ஆட்குறைப்பும் அதிகரித்தது.

இருப்பினும், இந்த இரு புள்ளிவிவரங்களும் 2009ல் ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடியின்போது காணப்பட்ட சரிவுகளைவிடக் குறைவாகவே உள்ளன.

சிங்கப்பூரர்கள், வெளிநாட்டினர் ஆகிய இரு பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் குறித்தோ, ஆட்குறைப்பு பற்றியோ துல்லியமான புள்ளிவிவரங்களை அமைச்சு வெளியிடவில்லை.

எனினும், கொரோனா கிருமித்தொற்று பரவலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் தாக்கம் பிப்ரவரி மாதத்திலிருந்தே உணரப்படும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

அதேசமயம் ஜனவரி மாதத்தில் சீனப் புத்தாண்டு காலக்கட்டத்தில் வர்த்தகம் சிறப்பாகவே இருந்தது.

கிருமித்தொற்று பரவலை முறியடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்ப நிறுவனங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருவதால் உலகளாவிய அளவிலும், சிங்கப்பூரிலும் தேவை குறைந்து வருவதால் வரவிருக்கும் காலாண்டில் ஊழியர் சந்தை நிலைமைகள் மோசமடையக்கூடும் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மேலும் தெரி வித்தது.

குறிப்புச் சொற்கள்