நேரம் மிகவும் முக்கியம். அதுவும் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் அமலில் இருக்கும்போது நேரத்தைக் கவனிப்பது மிகவும் முக்கியம்.
ஆனால் ஏஐஏயின் நிதி ஆலோசகரான 22 வயது டே சுன் சியன் சற்று அலட்சியமாக இருந்ததால் 1,500 வெள்ளி அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றுடைய நபருடன் நெருக்கமான தொடர்பு இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மார்ச் 19ஆம் தேதியிலிருந்து மார்ச் 22ஆம் தேதி நண்பகல் 12.00 மணி வரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று டேவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் அவர் கட்டாயம் வெளியே செல்லக் கூடாது. கடைசி நாளன்று கட்டுப்பாடு முடிவதற்கு 30 நிமிடங்கள் இருந்தபோது காலைநேர பசி வயிற்றைக் கிள்ளியதால் அவர் பொறுக்க முடியாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
சுமார் ஏழு நிமிட நடை தொலைவில் இருந்த சூவா சூ காங் ஸ்திரீட் 62ன் யிவ் டீ ஸ்கொயரில் உள்ள உணவு நிலையத்துக்கு அவர் சென்றார். அங்கு உணவை வாங்கி அங்கிருந்த மேசையிலேயே அமர்ந்து அவர் சாப்பிட்டார்.
சுமார் 11.40 மணியளவில் டே வீட்டில் இருக்கிறாரா என்பதை அறிய செர்டிஸ் சிஸ்கோ அதிகாரி ஒருவர், அவரை கைத்தொலைபேசியில் அழைத்தார்.
அப்போது உணவு வாங்குவதற்காக வெளியே சென்றதாக அதிகாரியிடம் கூறிய டே உடனடியாக வீட்டுக்குத் திரும்பி விடுவதாகவும் சொன்னார்.
நண்பகல் 12.00 மணிக்குள் அவர் வீடு திரும்பினாலும் உத்தரவை மீறி வெளியே வந்ததற்காக நேற்று அவருக்கு 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பேசிய அரசாங்க வழக்கறிஞர், டேவுக்கு வழங்கப்பட்ட எழுத்துபூர்வ உத்தரவில் மார்ச் 19 முதல் மார்ச் 22, நண்பகல் 12.00 மணி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாக அடிக்கோடிட்டு காட்டப்பட்டு இருந்தது என்றார்.
ஆனால் அப்படியும் அவர் வெளியே சென்றதாக வழக்கறிஞர் கூறினார்.

