என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குச் செல்வோரின் அடையாள அட்டை எண் பதிவு செய்யப்படும்

என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குச் செல்வோரின் அடையாள அட்டை எண் பதிவு செய்யப்படும்

2 mins read
d9551cbd-20c7-467f-8f44-4f635e1cbc4f
ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் கொண்டு செல்லாவிட்டால் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யவலாம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மளிகைப் பொருட்களை வாங்க என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், பேரங்காடிகளுக்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் அடையாள அட்டையை ஸ்கேன் செய்ய வேண்டும்.

பேரங்காடியில் இருப்பவர்களில் யாராவதுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது பிறகு தெரிய வந்தால் அவர் அங்கு இருந்தபோது அங்கிருந்த மற்றவர்களை அடையாளம் காண இந்த நடவடிக்கை உதவும்.

பேரங்காடிக்குள் நுழைவதற்கு முன்பு வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுவதுடன் அவர்களது அடையாள அட்டைகளும் ஸ்கேன் செய்யப்படும்.

இந்த நடவடிக்கை கடந்த திங்கட்கிழமையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வார இறுதிக்குள் அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் இது நடப்புக்கு வந்துவிடும் என்று ஃபேர்பிரைசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

"ஃபேர்பிரைஸ் தொடர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பாதுகாப்பான இடைவெளியை விடுதல், தனிநபர் பாதுகாப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். "கிருமித்தொற்றால் ஏற்பட்டு உள்ள நெருக்கடிமிக்க காலகட்டத்தில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரின் நலனைக் காக்க பேரங்காடிகளைச் சுத்தம் செய்ய மேற்கொள்ளப்படும் துப்புரவுப் பணிகளை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்.

"பேரங்காடிக்கு வருபவர்களில் யாராவது ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தால் அவர்கள் பேரங்காடியில் இருந்த அதே நேரத்தில் அங்கு இருந்த மற்றவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிகாரிகளின் ஆலோசனையுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டுள்ளது.

ஃபேர்பிரைஸ் பேரங்காடிக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள அட்டையைக் கொண்டு செல்லாவிட்டால் 'கியூஆர்' குறியீடு மூலமாக தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்