18 மாதங்களுக்கு மூடப்படும் சாங்கி விமான நிலைய முனையம் 2

18 மாதங்களுக்கு மூடப்படும் சாங்கி விமான நிலைய முனையம் 2

2 mins read
7c313e6e-5cde-4092-a0d8-89c027572a93
கொரோனா கிருமித்தொற்று காலத்தில் செலவுகளைக் குறைப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் நாளை (மே 1) முதல் 18 மாதங்களுக்கு சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 மூடப்படவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித்தொற்று காலத்தில் செலவுகளைக் குறைப்பதற்காகவும் திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காகவும் நாளை (மே 1) முதல் 18 மாதங்களுக்கு சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 மூடப்படவுள்ளது.

இன்று காலை 6.10 மணிக்கு தோக்கியோவுக்குக் கிளம்பிய ஏர் ஜப்பான் விமானம்தான் முனையம் மூடப்படுவதற்கு முன்பு கிளம்பிச் சென்ற கடைசி விமானம்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முனையம் 2ன் விரிவாக்கப் பணிகள் முன்பு 2024ஆம் ஆண்டில் நிறைவுபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது பணிகள் முடுக்கிவிடப்படுவதால் ஓராண்டு காலத்துக்கு முன்னதாகவே பணிகள் நிறைவுறும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

ஏற்கெனவே பயணிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ள நிலையில் இந்த நிலவரம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடிக்கும் என்று குறிப்பிட்ட குழுமம், விமான நிலையப் பணிகள் சில முனையங்களில் மட்டும் செயல்படுத்தப்படுவதன் மூலம் நடைமுறைச் செலவினங்களைக் குறைக்க முடியும் என்றது.

அலுவலகங்கள், பொது கார் நிறுத்துமிடங்கள் தவிர பயண ஆயத்தம், குடிநுழைவு, பயணிகள் வருகை, அந்த முனையத்தில் இயங்கும் சில்லறை விற்பனை மற்றும் உணவுக் கடைகள் என அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.

இந்த சிரமமான காலத்தில் கூடிய அளவுக்கு வேலைகளைப் பாதுகாக்கவும் மறு பயிற்சி , மீண்டும் வேலையில் அமர்த்துதல் ஆகியவற்றின் தொடர்பில் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றப்போவதாகவும் குழுமம் தெரிவித்தது.

முனையம் 2ன் விமானச் செயல்பாடுகள் முனையங்கள் 1, 3க்கு மாற்றப்படும். எடுத்துக்காட்டாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எட்டிஹாட் ஏர்வேஸ் போன்றவை தற்போது முனையம் 3க்கு மாற்றப்பட்டுள்ளன.

சில விமானங்களே தரையிறங்குவதால் முனையம் 4ன் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜுவல்லில் இருக்கும் இணைப்புப் பாலம் திறந்திருந்தாலும் முனையம் 2லிருந்து 'ஸ்கை டிரெயின்' சேவைகள் இருக்காது.

குறிப்புச் சொற்கள்