சிங்கப்பூர் எக்ஸ்போவில் தங்கியிருக்கும் 4,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு சிற்றுண்டி

கொரோனா கிருமித்தொற்று காலகட்டத்தில் பலரும் பல வகைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆனந்த பவன் உணவகம் இம்மாதம் 18ஆம் தேதியன்று, சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டம் ஒன்றில் ஈடுபட்டது. 

அந்த உணவகத்தின் ஊழியர்கள், ‘டிவைன் பிலிஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் ஊழியர்கள், சமூக உறுப்பினர்கள் ஆகியோர் ஒன்றுசேர்ந்து 4,000 ‘மிக்சர்’ முறுக்குப் பொட்டலங்களைத் தயாரித்து அவற்றை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு விநியோகிக்க அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் நாட்டின் பொருளியலுக்குப் பங்களித்த வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஆனந்த பவன் உணவகத்தார் கூறினர்.